சென்னை: கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டில், 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கி, கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இந்தச்சட்டத்தின் மூலம் இந்தாண்டு முதல் தொழிற்கல்வி உள்ளிட்ட அனைத்துக் கல்விகளுக்கும் மாணவர் சேர்க்கை உள் ஒதுக்கீட்டு முறையின் அடிப்படையில் நடைபெறும் என அரசு அறிவித்தது.
இட ஒதுக்கீட்டால் பிற பிரிவு பாதிப்பா?
இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி, சுவாமிநாதன் உள்பட 25க்கும் மேற்பட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனை நீதிபதிகள் எம்.துரைசாமி, கே. முரளிசங்கர் அமர்வு விசாரித்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில், 'சாதிவாரி கணக்கெடுப்பை முடிக்காமல் எப்படி இந்த சட்டம் இயற்றப்பட்டது.
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டில், 68 சாதிகளைக் கொண்ட சீர் மரபினர் பிரிவினருக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி வரும் நிலையில், வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியதன் மூலம் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள 22 சாதிகளுக்கு வெறும் 2.5விழுக்காடு இட ஒதுக்கீடு மட்டுமே கிடைக்கும்.
உண்மையிலே வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று எண்ணம் அரசுக்கு இருந்திருந்தால் அதை முன்கூட்டியே செய்திருக்க வேண்டும். தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் லாபத்திற்காக இந்த சட்டம் இயற்றப்பட்டு உள்ளது" என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இட ஒதுக்கீடு, அரசின் கொள்கை முடிவு
தமிழ்நாடு அரசுத்தரப்பில், "தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையிலேயே வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டுமென்ற கொள்கையின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் 1983இல் நடத்திய கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 13.01 விழுக்காடு வன்னியர் சமூகத்தினர் உள்ளதாக கிடைத்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல் அறிவிப்பதற்கு சற்று நேரத்திற்கு முன் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதாக மனுதாரர்கள் கூறுவதை ஏற்க முடியாது. ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு கடைசி நிமிடம் வரை கொள்கை முடிவெடுக்கவும், சட்டம் இயற்றவும் அதிகாரம் உள்ளது. இதில், அரசியல் காரணங்களோ? அவசரமோ? ஏதுமில்லை.
மற்ற சாதியினர் இந்த சட்டத்தின் மூலம் பாதிக்கப்படுவர் என மனுதாரர்கள் கூறுவது வெறும் கற்பனையே. இதனால், குறிப்பிட்ட பிரிவுக்கு அதிகமான இட ஒதுக்கீடு வழங்கியதாக கருத முடியாது. அரசியல் சட்டத்தை பின்பற்றியே இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளதால் 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டை எதிர்த்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
இட ஒதுக்கீட்டில் அரசியல் இல்லை
இந்த வழக்கில் இடையீட்டு மனுதாரராக பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில்," வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீட்டால் மற்ற பிரிவினருக்கு எந்த பாதிப்பும் இல்லை. தேர்தலில் குறிப்பிட்ட சமூகத்தினரின் வாக்குகளைப் பெற அரசியல் உள்நோக்கத்துடன் இந்த இட ஒதுக்கீடு வழங்குவதாக கூறுவது தவறு.