தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வன்னியர் உள் ஒதுக்கீடு வழக்கில் இன்று தீர்ப்பு!

வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி இயற்றப்பட்ட சட்டத்தை ரத்து செய்யக் கோரிய வழக்குகளில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று (நவ. 1) தீர்ப்பளிக்க உள்ளது.

வன்னியர் உள் ஒதுக்கீடு வழக்கில் இன்று தீர்ப்பு
வன்னியர் உள் ஒதுக்கீடு வழக்கில் இன்று தீர்ப்பு

By

Published : Nov 1, 2021, 7:45 AM IST

Updated : Nov 1, 2021, 8:18 AM IST

சென்னை: கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 விழுக்காடு ஒதுக்கீட்டில், 10.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கி, கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி, சுவாமிநாதன் உள்பட 25க்கும் மேற்பட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளி சங்கர் ஆகியோர் அடங்கிய அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.

மனுதாரர் தரப்பு

இந்த விசாரணையின் போது, மனுதாரர்கள் தரப்பில், ”சாதிவாரி கணக்கெடுப்பை முடிக்காமல் எப்படி இந்த சட்டம் இயற்றப்பட்டது?” எனவும், ”மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டில், 68 சாதிகளைக் கொண்ட சீர் மரபினர் பிரிவினருக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி வரும் நிலையில், வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியதன் மூலம் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள 22 சாதிகளுக்கு வெறும் 2.5 விழுக்காடு இட ஒதுக்கீடு மட்டுமே கிடைக்கும்” என்றும் வாதிடப்பட்டது.

அரசியல் லாபத்திற்காக

உண்மையிலே வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று எண்ணம் இருந்திருந்தால் அதை முன்கூட்டியே செய்திருக்கவேண்டும் என்றும், தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் லாபத்திற்காக இந்தச்சட்டம் இயற்றப்பட்டு உள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

அரசு தரப்பு விவாதம்

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசுத் தரப்பில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையிலேயே வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதாகவும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களின் மக்கள் தொகைக்கேற்ப இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டுமென்ற கொள்கையின் அடிப்படையில் இந்த இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்

நம்பத்தகுந்த புள்ளிவிவரங்கள்

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் 1983இல் நடத்திய கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 13.01 விழுக்காடு நபர்கள் வன்னியர்கள் உள்ளதாக கிடைத்த நம்பத்தகுந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையிலேயே இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசுத்தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேர்தலை மையமாக வைத்து அறிவிக்கப்படவில்லை

தேர்தல் அறிவிப்பதற்கு சற்று நேரத்திற்கு முன் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதாக மனுதாரர்கள் கூறுவதை ஏற்க முடியாது எனவும், ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு கடைசி நிமிடம் வரை கொள்கை முடிவெடுக்கவும், சட்டம் இயற்றவும் அதிகாரம் உள்ளதாகவும், இதில் அரசியல் காரணங்களோ அவசரமோ ஏதுமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

மற்ற சாதியினர் இந்தச் சட்டத்தின் மூலம் பாதிக்கப்படுவர் என மனுதாரர்கள் கூறுவது வெறும் கற்பனையே எனவும், குறிப்பிட்ட பிரிவுக்கு அதிகமான இட ஒதுக்கீடு வழங்கியதாக கருத முடியாது எனவும், அரசியல் சட்டத்தை பின்பற்றியே இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளதால் 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டை எதிர்த்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசுத் தரப்பில் கோரப்பட்டது.

எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை

இந்த வழக்கில் இடையீட்டு மனுதாரராக பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில், வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீட்டால் மற்ற பிரிவினருக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும், தேர்தலில் குறிப்பிட்ட சாதியினரின் வாக்குகளைப் பெற அரசியல் உள்நோக்கத்துடன் இந்த இட ஒதுக்கீடு வழங்குவதாக கூறுவது தவறு எனவும், தெரிவிக்கப்பட்டது.

வன்னியர் உள் ஒதுக்கீடு

வன்னியர் சாதியினருக்கு மட்டும் 10.5 வழங்கப்படவில்லை

மேலும், முந்தைய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டத்தை அமல்படுத்த புதிய அரசு உத்தரவிட்டுள்ளதன் மூலம், இந்தச் சட்டத்தை நிறைவேற்றியதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என்பது நிரூபணமாகியுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மேலும், வன்னியர் சாதியினருக்கு மட்டும் 10.5 விழுக்காடு ஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனவும், வன்னியகுல சத்திரியர் பிரிவில் ஏழு சாதியினர் உள்ளதாகவும், வன்னியர் இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் உள்ளதாகவும் வாதிடப்பட்டது.

இவ்வாறு மனுதாரர்களின் வாதம், அரசு தரப்பு வாதம், இடையீட்டு மனுதாரரான பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு வாதம் என அனைத்து தரப்பு வாதங்களும் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்த நிலையில், இப்போது இந்த வழக்கில் விசாரணை நிறைவடைந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று (நவ. 1) தீர்ப்பு வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் ரஜினிகாந்த்!

Last Updated : Nov 1, 2021, 8:18 AM IST

ABOUT THE AUTHOR

...view details