தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வன்னியர் இட ஒதுக்கீடு: சட்டமும் ரத்து, ஒதுக்கீடும் ரத்து! - vanniyar reservation

வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து
வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து

By

Published : Nov 1, 2021, 11:00 AM IST

Updated : Nov 1, 2021, 12:56 PM IST

10:56 November 01

வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு சட்டவிரோதமானது எனக்கூறி, தமிழ்நாடு அரசு பிறப்பித்த இட ஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பளித்துள்ளது.

மதுரை:கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 விழுக்காடு ஒதுக்கீட்டில், 10.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கி, கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி, சுவாமிநாதன் உள்பட 25க்கும் மேற்பட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் ஆகியோர் அடங்கிய அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.  

மதுரைக் கிளை தீர்ப்பு

இதில், மனுதாரர்களின் வாதம், அரசு தரப்பு வாதம், இடையீட்டு மனுதாரரான பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு வாதம் என அனைத்து தரப்பு வாதங்களும் உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டன.  

இந்த வழக்கில் விசாரணை நிறைவடைந்த நிலையில், இன்று (நவ.01) தீர்ப்பு வழங்கப்படும் என உயர் நீதிமன்றம் அறிவித்திருந்தது.

ஆறு கேள்விகள் 

இந்நிலையில், உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில், நீதிபதிகள் துரைசாமி, முரளி சங்கர் அமர்வு கூறியதாவது, "தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு பின்பற்றப்படும் நிலையில், அதற்குள் உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் இயற்ற தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் உள்ளதா, சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க முடியுமா, முறையான அளவுசார் தரவுகள் (Quantifiable Data) இல்லாமல் இட ஒதுக்கீடு வழங்க முடியுமா என்பன உள்ளிட்ட ஆறு கேள்விகளை அரசிடம் எழுப்பினோம்.

இதற்கு அரசு அளித்த பதில் ஏற்புடையதாக இல்லை. இது தீர்ப்பில் விளக்கப்பட்டுள்ளது. வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது" என்றனர்.

மேலும், வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு சட்டவிரோதமானது எனக்கூறி, அரசு பிறப்பித்த இட ஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பளித்தது.

சட்டம் மூலம் கிடைத்த வாய்ப்பும் ரத்து

தொடர்ந்து, தீர்ப்புக்குப் பின்னர் வன்னியர் இட ஒதுக்கீட்டில் கல்வி அல்லது வேலை வாய்ப்பில் இடம் வழங்கிய உத்தரவுகள் குறித்து சில வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பியபோது, சட்டமே ரத்தாகிவிட்டதால் அதன் மூலம் கிடைக்கப்பெற்ற வாய்ப்புகளும் ரத்தாகிவிடும் என நீதிபதிகள் விளக்கம் அளித்தனர்.

அப்போது இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் இடம் கிடைத்த மாணவர் தரப்பில், இந்தத் தீர்ப்பால் தனது கல்வி பாதிக்கப்படும் என்பதால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செல்லும் வகையில், தீர்ப்பை சில வாரங்கள் நிறுத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்தக் கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.

இந்நிலையில், சட்டம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: வன்னியர் உள் ஒதுக்கீடு வழக்கில் இன்று தீர்ப்பு!

Last Updated : Nov 1, 2021, 12:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details