தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வண்டலூர் பூங்கா ஒப்பந்த ஊழியர்களை தனியார் வசம் ஒப்படைக்கக்கூடாது - ராமதாஸ் அறிக்கை! - பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பணியாற்றிவரும் ஒப்பந்தத் தொழிலாளர்களை, தனியாரிடம் ஒப்படைக்கும் பூங்கா நிர்வாகத்தின் முடிவுக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

vandalur
vandalur

By

Published : Jun 13, 2022, 7:59 PM IST

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் 75 நிரந்தரப் பணியாளர்களும், 219 ஒப்பந்தப் பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.

ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மாதத்தில் 26 நாட்கள் வேலை அளித்து, அதற்கான ஊதியத்தை தினக்கூலி அடிப்படையில் நிர்வாகம் வழங்கி வருகிறது. ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஊதியத்தை நிர்வாகமே நேரடியாக வழங்கி வரும் நிலையில், அவர்களை தனியார் நிறுவனத்தின்கீழ் கொண்டுவர பூங்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த முடிவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், "வண்டலூர் பூங்காவில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு இப்போதுவரை வருங்கால வைப்பு நிதி, இஎஸ்ஐ ஆகியவற்றை அரசே செலுத்தி வந்தது. ஒப்பந்த தொழிலாளர்கள் தனியார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டால், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஊதியத்தை அரசு வழங்குவது தவிர்க்கப்பட்டு, தனியார் நிறுவனம் இவர்களுக்கான ஊதியத்தை வழங்கி, அதற்கான சேவைக் கட்டணத்தையும் சேர்த்து அரசிடம் வாங்கும் நடைமுறை வந்துவிடும்.

கடந்த ஆட்சியில் அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டபோது, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அதைக் கடுமையாக எதிர்த்தார். அத்தோடு மட்டுமல்லாமல் திமுக ஆட்சிக்கு வந்தால் பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் படிப்படியாக பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்றும், திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது.

ஆனால், தற்போதுவரை அரசு அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல், ஒப்பந்தத் தொழிலாளர்களை தனியார் வசம் ஒப்படைக்கும் நடவடிக்கை எடுத்து வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. வண்டலூர் உயிரியல் பூங்கா தற்காலிகத் தொழிலாளர்களை தனியார் வசம் ஒப்படைக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.

உயிரியல் பூங்காவில் மட்டுமல்லாமல் சென்னை குடிநீர் வாரியம், பல்கலைக் கழகங்கள் ஆகியவற்றில் தற்காலிக அடிப்படையிலும், அவுட்சோர்சிங் முறையிலும் பணியாற்றி வரும் ஒப்பந்தத் தொழிலாளர்களை அரசு படிப்படியாக நிரந்தரமாக்க முயற்சி செய்ய வேண்டும். பணி மூப்பு அனுபவம் போன்ற தகுதிகளின் அடிப்படையில், ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: 'மகனை போலீசார் அடித்து கொன்றுள்ளனர்' - ராஜசேகரின் தாய் பேட்டி!

ABOUT THE AUTHOR

...view details