சித்திரை திருநாளுக்கு வாழ்த்து தெரிவித்து வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கையில், "தமிழர் வாழ்வில் முத்திரை பதிக்கும் சித்திரை மலர்கின்றது. இளவேனில் காலத்தின் தொடக்கமாக மலரும் பொன்னாள். சுட்டு எரிக்கும் கோடை, வெம்மையைத் தந்து, இயற்கையின் ஆடைகளாம் இலைகளை உதிரச் செய்து, கூம்பி நிற்கும் மரங்களையும் காட்டி, பின்னர் மெல்ல மெல்ல அவை துளிர்த்து, இலைகளையும் மொட்டுக்களையும் பூக்களையும் காய்களையும் கனிகளையும் தந்து, இயற்கைத் தாய் நம்மை களிப்பு அடையச் செய்யும் காலம். காலங்கள் மாறுவதுபோல், வாழ்வின் பல நிலைகள் நமக்கு அறிவை போதிக்கும்.
சித்திரைப் பிறப்பை ஆண்டின் தொடக்கமாகக் கொண்டு, 60 வடமொழிப் பெயர்களைச் சூட்டி, இது தமிழ்ப் புத்தாண்டு என்று நம்மை மயங்க வைத்த சனாதனிகளின் நிலையை மாற்றி, ’தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்று தைத் திருநாளில் பிறப்பதே தமிழர் புத்தாண்டு. அதுவே திருவள்ளுவர் ஆண்டின் தொடக்கம் என்று தமிழ்நாடு அரசு கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் முடிவு எடுத்து அறிவித்தது. இதற்கு அடிப்படையாக, நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள் கொண்ட புலவர் குழுவும் தரவுகளைத் தந்துள்ளது.
அதுவும் இந்த ஆண்டு, ’மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ என்று கொண்டாடும் மக்கள் ஆட்சித் தத்துவத்தின் மாண்பை நிலைநாட்டும் தேர்தல் முடிந்து நல்ல தீர்ப்பை நாடே எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறது. ’மலரும் சித்திரையில், தளரும் பகை; வளரும் நகை’ என்று மகிழ்வோடு இந்நாளை நாம் கொண்டாடி மகிழ்வோம்.
பல மாநிலங்களின் ஒன்றியமான இந்தியாவின் அரசியல் அமைப்புச் சட்டத்தை ஆக்கித் தந்த மாமேதை, அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பிறந்த பொன்னாள் ஏப்ரல் 14. ஒடுக்கப்பட்டுக் கிடந்த மக்களுள் ஒருவராகப் பிறந்து, மதி நுட்பத்தால், பல்வேறு துறைகளில் மேன்மையான பட்டங்களைப் பெற்று, உலக நாடுகளின் அரசு அமைப்புச் சட்டங்களின் மிகப்பெரும் தன்மைகளை எல்லாம் ஆராய்ந்து, இந்திய மாநிலங்களின் ஒன்றியத்திற்கான அரசு அமைப்புச் சட்டத்தை, நெகிழ்ச்சி உடையதாகவும், அதே நேரத்தில் இறுக்கமானதாகவும் ஆக்கித் தந்த அண்ணல் அம்பேத்கரின் பிறப்பும் அறிவுப் பரப்பும் எண்ணுந்தொறும் உள்ளம் சிலிர்க்கும்.
அறிவின் வாராத வெற்றிகள் இல்லை என்பதை நிலைநாட்டியவர். சனாதனத்தின் சம்மட்டி அடிகளை எதிர்கொண்டு, மனிதர் வாழ்வை மனிதர் பறிக்கும் வழக்கம் இனி இல்லை. இன்று எட்டுத் திக்கும் அறிவு முரசு கொட்டிய ஆசான் அண்ணல் அம்பேத்கர். அவரும், தந்தை பெரியாரும், துணைக்கண்டத்தில் ஆக்கித் தந்து இருக்கின்ற புது யுகத்தை பொன் யுகமாக மாற்றுவோம் என்கின்ற உறுதியோடு உழைக்க, இந்நாளில் சூளுரை மேற்கொள்வோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.