இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்," தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் குறைந்தது 30 ஆயிரம் பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகி, மருத்துவமனைகளைத் தேடி அலைந்து கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில், ஏற்கனவே கரோனா தாக்கி, மருத்துவம் செய்து நலம் பெற்று மீண்டு வந்தவர்களை கறுப்பு பூஞ்சை (மியூகோர் மைகோசிஸ்) என்ற புதிய தொற்றுத் தாக்குவதாக செய்திகள் வருகின்றன.
மராட்டிய மாநிலத்தில் 64 பேர் இறந்துள்ளனர். புதுடெல்லி மற்றும் கர்நாடகாவிலும் தாக்கி இருக்கின்றது. இதன் அறிகுறிகள் தமிழ்நாட்டிலும் தெரியத் தொடங்கி இருக்கிறது. நேற்று(மே.19) கோவில்பட்டியில் இரண்டு பேர், கறுப்பு பூஞ்சை பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகத் தகவல் வந்தது.
ஏற்கனவே இனிப்பு(நீரழிவு) நோயால் பாதிக்கப்பட்டவர்களை, கறுப்பு பூஞ்சை உடனடியாகத் தொற்றுகின்றது. இது கண்கள், பற்கள் வழியாக குருதியில் கலந்து உயிரைப் பறிக்கும் தன்மை உடையது. இந்த நோய்க்கு, Lipsomal Amphotericin B Injection மருந்தை, இந்தியா முழுமையும் பரிந்துரைக்கின்றனர்.