தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

’மதிமுகவின் பரப்புரை பணிகளுக்கு உயிரோட்டமான பாடல்கள் எழுதியவர்’ - புலமைப்பித்தனுக்கு வைகோ இரங்கல் - புலைமைப்பித்தன் வைகோ

சென்னை: மதிமுகவின் பரப்புரை பணிகளுக்கு உயிரோட்டமான பாடல்கள் எழுதிக் கொடுத்து உணர்வூட்டியவர் என புலமைப்பித்தன் மறைவுக்கு வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

புலமைப்பித்தனுக்கு வைகோ இரங்கல்
புலமைப்பித்தனுக்கு வைகோ இரங்கல்

By

Published : Sep 8, 2021, 2:29 PM IST

அதிமுக முன்னாள் அவைத் தலைவரும், பாடலாசிரியருமான புலமைப்பித்தன் உடல் நலக்குறைவு காரணமாக இன்று (செப்.08) காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர், தமிழ் ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் இனப்பற்றாளர்

அந்த வகையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “தன்மான உணர்வும், தமிழ் இனப் பற்றும், தமிழ் ஈழ விடுதலைக்காக தணியாத தாகமும் கொண்ட புலவர் புலமைப் பித்தன் இன்று மறைந்தார் என்ற துயரச் செய்தி கேட்டு, பெரிதும் வருந்துகிறேன்.

கொங்கு மண்டலத்தில் பள்ளம்பாளையம் எனும் கிராமத்தில் 6.10.1935 அன்று பிறந்த புலமைப் பித்தன், 85 வயதில் மறைந்த காலம் வரை தமிழுக்காகவும், தமிழ் இன மேம்பாட்டுக்காவும் அயராது உழைத்த பெருமகன் ஆவார்.

எம்ஜிஆருக்கு பாடல் எழுதி பெருமை சேர்த்தவர்

அஇஅதிமுகவின் அவைத் தலைவரார், தமிழ்நாடு சட்டமன்ற மேலவை துணைத் தலைவர், தமிழ்நாடு அரசவைக் கவிஞர் ஆகிய பொறுப்புகளில் சிறப்பாகப் பணியாற்றிய புலமைப் பித்தனுக்கு, தமிழ்நாடு அரசு 2001ஆம் ஆண்டு பெரியார் விருது அளித்துப் பாராட்டியது.

எம்.ஜி.ஆரின் திரைப்படங்கள் பலவற்றுக்கு திரைப்படப் பாடல்கள் எழுதி பெருமை சேர்த்தவர் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. மறுமலர்ச்சி திமுகவின் பரப்புரை பணிகளுக்கு உயிரோட்டமான பாடல்கள் எழுதிக் கொடுத்து உணர்வு ஊட்டினார்.

4 முறை சிறந்த பாடலாசிரியர்

தமிழ்நாடு அரசு நான்கு முறை சிறந்த பாடல் ஆசிரியருக்கான விருதினை அளித்து புலமைப்பித்தனுக்கு பெருமை சேர்த்தது. தமிழ் ஈழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரனும், பேபி சுப்ரமணியம் உள்ளிட்ட புலிப் படைத் தளபதிகளும், விடுதலைப் புலிகளும் அவரது வீட்டில் தங்கி, தமிழ் ஈழ விடுதலைக்கான பணிகளில் ஈடுபட்டார்கள். இரண்டாம் தாயகம் என்றே அவரது இல்லத்தை புலிகள் அழைத்தார்கள்.

என் மீது அளவு கடந்த அன்பு கொண்ட புலமைப் பித்தன், அடிக்கடி அலைபேசியில் தொடர்புகொண்டு, என்னுடைய உடல்நலம் குறித்து பேசி மகிழ்வது வழக்கம். அவர் உடல்நலம் குறித்தும் மிகுந்த அக்கறையும் அன்பும் கொண்டு நான் கவனித்திருக்கிறேன். இறுதிக் காலத்தில் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் நோயுடன் போராடி, அந்த மாவீரன் தன் வாழ்க்கையை நிறைவு செய்துள்ளார்.

அவரது தமிழ்ப் பணிக்கு மறுமலர்ச்சி திமுக சார்பில் வீர வணக்கத்தையும் அவரது உறவினர்களுக்கும் இயக்கத்தவர்களுக்கும் என் அன்பான ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:புலமைப்பித்தன் மறைவு துயரம் தருகிறது- கவிஞர் வைரமுத்து

ABOUT THE AUTHOR

...view details