இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
'தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக, நாட்டுக்கே உணவளித்து வரும் டெல்டா மாவட்டங்கள், காவிரி டெல்டா, ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டங்களால் முழுமையாகச் சூறையாடப்படும் சூழல் உருவாகி உள்ளது. இத்திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யக் கோரி பொதுமக்களும், விவசாயிகளும் தன்னெழுச்சியாகப் போராடிவருகின்றனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் முதற்கட்டமாக 274 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க மத்திய அரசு சுற்றுச் சூழல் அனுமதி அளித்ததையடுத்து வேதாந்தா நிறுவனம் அதற்கான அடிப்படைப் பணிகளை முடித்துவிட்டது. இது தவிர ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு 27 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட ஆய்வு செய்திட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, அரியலூர், கடலூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மேலும் 104 கிணறுகள் அமைக்க ஓ.என்.ஜி.சி. சுற்றுச் சூழல் அனுமதி கோரி விண்ணப்பம் செய்துள்ள தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.
காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்கக் கோரியும், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை முற்றாக கைவிடக் கோரியும் ஜூன் 23 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் தொடங்கி, புதுச்சேரி, கடலூர், காரைக்கால், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டம் - ராமேஸ்வரம் வரை 596 கிலோ மீட்டர் தொலைவுக்கு இலட்சக்கணக்கான மக்கள் மனிதச் சங்கிலியாக கரம் கோர்த்து அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்கள் கொந்தளிப்பை அலட்சியப்படுத்திவிட்டு, காவிரி தீரத்தைப் பாலைவனமாக ஆக்கியே தீருவோம் என்று மோடி அரசு வரிந்துகட்டிக்கொண்டு நிற்பதும், அதற்கு எடப்பாடி பழனிச்சாமி அரசு துணைபோவதும் கடும் கண்டனத்திற்கு உரியது. பா.ஜ.க. அரசு செயல்படுத்த திட்டமிடும் ஹைட்ரோ கார்பன் திட்டம், ஒட்டுமொத்தத் தமிழகத்தையே சூறையாடி விடும்.
எனவே, மத்திய - மாநில அரசுகள் விபரீதத்தை விதைக்காமல், ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டங்களை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துவதாக அதில் குறிப்பிட்டிருந்தார்.