இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்வில் வெற்றி காண முடியாமல் தோல்வி அடைந்த தமிழ்நாடு மாணவிகள் இருவர் தற்கொலை செய்துகொண்டு உயிரை மாய்த்துக்கொண்ட செய்தி அதிர்ச்சியையும், வேதனையையும் தருவதாக தெரிவித்துள்ளார்.
மத்திய பாஜக அரசு நீட் நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கியதன் மூலம் சாதாரண எளிய குடும்பப் பின்னணியில் தேர்வு எழுதும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவப் படிப்புகளை கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாத சூழலை ஏற்படுத்தி இருக்கின்றது என கூறியுள்ளார். மத்திய, மாநில அரசுகள் இன்னும் எத்தனை உயிர்களைப் பலி வாங்கப் போகின்றன? என வேதனைப்பட கேள்வி எழுப்பியுள்ளார்.
புற்றீசல் போல நீட் பயிற்சி மையங்கள் முளைத்திருப்பதும், மேல்நிலைப் படிப்பு பயில்வது கூட இரண்டாம் பட்ச நிலைக்குத் தள்ளப்பட்டு இருப்பதும் கல்வித்துறையின் அவலம் ஆகும் என்றார்.
மருத்துவக் கல்வி பாரபட்சமின்றி அனைத்துத் தரப்பு மாணவ, மாணவிகளுக்கும் கிடைக்க, நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குப் பெறுவதும், மத்திய அரசின் பிடியிலிருந்து கல்வியை முழுமையாக மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வருவதும்தான் ஒரே வழியாகும் என யோசனை தெரிவித்துள்ளார். அப்போதுதான் இதுபோன்ற தற்கொலைக் கொடுமைகளுக்கு முடிவு கட்ட முடியும் எனக் கூறியுள்ளார்.
மேலும், உயிரிழந்த மாணவிகள் ரிதுஸ்ரீ, வைஷ்யா குடும்பத்தினருக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாக வைகோ குறிப்பிட்டுள்ளார்.