சென்னை மெரினா கடற்கரையில் மாநகராட்சியால் கட்டப்பட்டுள்ள “நம்ம CHENNAI” என்ற அடையாளச் சின்னத்தை நேற்று(ஜன.29) தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார். இது அடையாளச் சின்னமாகத் தெரியவில்லை. மாறாக, நம் தாய்த் தமிழ் மொழியை அவமதிக்கும் சின்னமாக உள்ளது என வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது; சென்னை சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ், மெரினா கடற்கரையில் ரூ. 24 லட்சம் செலவில் ராணி மேரி கல்லூரி அருகில், சென்னையின் பெருமை, மாண்பை கொண்டாடும் விதத்திலும், பொதுமக்கள் தாங்களே சுய புகைப்படம் (செல்ஃபி) எடுத்து, சென்னை மாநகரத்தின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்திடவும் இந்தச் சிற்பத்தை அமைத்ததாகக் கூறப்படுகின்றது.
இனி சென்னையில் ஒரு முக்கிய அடையாளமாக திகழும். உலகின் பல நாடுகளிலும், டெல்லி, ஐதராபாத், பெங்களூரு நகரங்களில் உருவாக்கப்பட்டுள்ள சிற்பங்களின் தொடர்ச்சியாகவும், இந்தச் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளதாக, சென்னை மாநகராட்சி நிர்வாகம் பெருமை பேசுகின்றது.
பேரறிஞர் அண்ணா முதல் அமைச்சராக இருந்தபோது, இதே சென்னை கடற்கரையில், தமிழுக்குத் தொண்டு ஆற்றிய திருவள்ளுவர், ஒளவையார், வீரமா முனிவர், பாரதி, பாரதிதாசன் என தமிழ்ப் புலவர்களுக்கு சிலை அமைத்துத் திறந்தார். அதேபோல கருணாநிதி திருவள்ளுவருக்கு அமைத்த கோட்டம் செம்மாந்து நிற்கின்றது.
நாகரிக வளர்ச்சியில் உலகத்தோடு ஒத்துப் போக வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதற்காக மொழிக் கலப்புக்கு அரசு துணை போகக் கூடாது. தமிங்கில மொழியில் எழுதக்கூடாது. தமிழ் வளர்ச்சித் துறை என்ற துறையை உருவாக்கி, ஒரு அமைச்சர் பொறுப்பு வகிக்கும் நம் மாநிலத்தில் இப்படி தமிழைச் சிதைக்கும் பணிகளில் ஈடுபடக்கூடாது.