தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நகர்புற உள்ளாட்சி தேர்தல் - தாம்பரம் மாநகராட்சியில் 7 பறக்கும் படைகள் - தமிழ்நாடு தேர்தல் ஆணையம்

நகர்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், 7 பறக்கும் படைகள் கண்காணிப்பில் ஈடுபடும் என தாம்பரம் மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

பேட்டி
பேட்டி

By

Published : Jan 29, 2022, 9:24 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு ஜன.28ஆம் தேதியான முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இந்நிலையில், புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் மாநகராட்சியின் ஆணையர் இளங்கோவன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, தாம்பரம் மாநகராட்சியில் ஜன.28 முதல் பிப்ரவரி 4ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். அதற்காக 7 தேர்தல் நடத்தும் உதவி அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

வார்டுகள் வரையறை

1 முதல் 10 வார்டுகள் அனகாபுத்தூரிலும், 11 முதல் 20 வார்டுகள் பம்மல் பகுதியிலும், 21 முதல் 30 வார்டு பல்லாவரம் நகராட்சி அலுவலகத்திலும், 31 முதல் 40 வரை பல்லாவரம் நகராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள பழைய வட்டாட்சியர் கட்டிடத்திலும் மனுதாக்கல் செய்யலாம்.

குறிப்பாக, 41 முதல் 50 வரை தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்திலும் 51 முதல் 60 வரை பெருங்களத்தூர் பேரூராட்சி அலுவலகத்திலும், 61 முதல் 70 வரை செம்பாக்கம் நகராட்சி அலுவலகத்திலும் மனு தாக்கல் செய்யலாம்.

தாம்பரம் மாநகராட்சி முழுவதும் 703 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்படும். அனைத்து வாக்கு மையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும்.

தாம்பரம் மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் பேட்டி

விதிமுறைகள்

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு வேட்பாளர் அல்லது முன்மொழிபவர் என ஒருவருக்கு மட்டுமே அனுமதி. வாக்கு சேகரிக்க வேட்பாளர் உட்பட 4 பேர் சென்று வாக்கு சேகரிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

வருகிற 31ஆம் தேதி வரை பேரணி,சைக்கிள் பேரணி, திறந்தவெளியில் பொதுக்கூட்டங்கள் போன்றவை நடத்தத் தடை செய்யப்பட்டுள்ளது.

உள்ளரங்கில் கூட்டம் நடத்த 100 பேருக்கு மட்டுமே அனுமதி. தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அனுமதி பெற்றிருக்க வேண்டியது கட்டாயம். மாநகராட்சி முழுவதும் சுவர் விளம்பரம்,சுவரொட்டிகள், பேனர்கள் போன்றவை வைக்க அனுமதி கிடையாது.

கண்காணிப்புகள் தீவிரம்

வேட்புமனு தாக்கல் முதல் வாக்குப்பதிவு வரை அனைத்தும் கேமராவில் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுபோல் 7 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

பொது மக்களுக்கு ஏதேனும் புகார் இருந்தால் இந்த கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வேளாண் பல்கலைக்கழகம் தரவரிசை பட்டியல் வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details