காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவுக்கு உட்பட்ட கொளத்தூர் ஊராட்சிமன்ற தலைவர் பதவியை பழங்குடியினத்தவருக்கு ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து கொளத்தூரைச் சேர்ந்த பி.பாஸ்கர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஊராட்சியில் வசிக்கும் பட்டியலின, பழங்குடியினர் குறித்த புள்ளிவிவரங்களை தவறாக குறிப்பிட்டு, தலைவர் பதவி, பட்டியலினத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மனுதாரரின் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாக கூறி, ஊராட்சிமன்ற தலைவர் பதவியை பழங்குடியினத்தவருக்கு ஒதுக்கிய உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டு இருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன், ஏ.ஏ. நக்கீரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இருதரப்பு வாதம்
அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம், கே.வி. சஞ்சீவ்குமார் ஆகியோர், தேர்தல் நடைமுறைகள் தொடங்கிய பிறகு நீதிமன்றம் தலையிட முடியாது என்றும், 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஆயிரத்து 195 பழங்குடியின வாக்காளர்கள் இருந்ததால், ஊராட்சிமன்ற தலைவர் பதவி பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டது என சுட்டிக்காட்டினர்.