அமைப்பு சாரா தொழிலாளர்கள் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் சேப்பாக்கத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது, ”மத்திய அரசின் தொழில்வாரியான 13 தொகுப்புச் சட்டங்களினால், கட்டட கட்டுமானத் தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள், திரை - பத்திரிகை மற்றும் பல்வேறு தொழில்வாரியான சட்டங்களை ரத்து செய்ய வழி வகை செய்யும் மசோதா மத்திய அரசால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனால் கட்டடத் தொழிலாளர்கள் உள்பட பல்வேறு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 40 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்களின் ரூ. 40 ஆயிரம் கோடி வாரியங்களில் உள்ளது. அந்தப் பணம் இனி என்னவாகும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. தமிழ்நாட்டில் 34 நல வாரியங்கள் உள்ளன. மத்திய அரசு கொண்டு வந்துள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான தொகுப்புச் சட்டத்தை திரும்பப்பெற மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.