சென்னை: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் , சேலம் பெரியார் பல்கலைக்கழகம் , மதுரை காமராஜர் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் நடைபெற்றுள்ள முறைகேடுகளை விசாரிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதற்கு அரசுக்கும், குறிப்பாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கும் தமிழ்நாடு அனைத்து அரசு கல்லூரி யு.ஜி.சி. தகுதி கௌரவ விரிவுரையாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள கடிதத்தில்,
"தமிழகத்தின் பிற பல்கலைக்கழகங்களிலும் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக அறிய முடிகிறது. எனவே அப்பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற முறைகேடுகளையும் விசாரிக்க குழு அமைக்க வேண்டும்.
அண்ணாமலை பல்கலைகழகம் அரசு கட்டுப்பாட்டில் வரும்போது, இது போன்ற குறைகள்சரி செய்யப்பட்டு சிறப்பாக உயர்கல்வித்துறை செயல்படும் என அமைச்சர் பொன்முடி அறிவிப்பால் தமிழகத்தில் உயர்கல்வித் துறையில் வேலைவாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கும் பட்டதாரிகளின் மனங்களில் பல ஆண்டுகளுக்குப் பிறகு நம்பிக்கை துளிர் விட்டிருக்கிறது" என சங்கத்தின் மாநில தலைவர் வெ.தங்கராஜ் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
"மேலும் கடந்த காலங்களில் நடைபெற்ற உயர்கல்வித்துறை முறைகேடுகளை விசாரிப்பதற்குக் குழு அமைத்துள்ளதால் அரசின் மீது கல்லூரி மாணவர்கள் மத்தியிலும் கல்வியாளர்கள் மத்தியிலும் வேலைவாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கும் வேலையில்லா பட்டதாரிகளின் மத்தியிலும் நம்பிக்கைக் கொள்ள செய்துள்ளது".