சென்னை:சென்னையில் உள்ள கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் மீன்வளத்துறை அலுவலர்களுடன், ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் நேற்று (ஆக. 21) ஆய்வுக்கூட்டம் நடத்தினார். இக்கூட்டத்தில் பேசிய அவர், “கடல்சார் பொருள்களின் ஏற்றுமதிகளை பாதிக்கும் பிரச்னைகளை தீர்க்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்.
2014-15ஆம் ஆண்டு முதல் 2018-19ஆம் ஆண்டுவரை சராசரியாக 10.2% வருடாந்திர வளர்ச்சி விகிதத்துடன் இந்தியாவில் மீன்வளத் துறை வியக்கத்தக்க வளர்ச்சியைக் எட்டியுள்ளது.
2019-20ஆம் ஆண்டில் இந்தியாவில் மீன் உற்பத்தி வரலாறு காணாத அளவில், 141.56 லட்சம் மெட்ரிக் டன்களாக இருந்தது. சர்வதேச அளவில் இந்திய மீன் உற்பத்தி தற்போது சுமார் எட்டு விழுக்காடாக உள்ள நிலையில், மீன் வளர்ப்பில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
ஏற்றுமதி சிறப்பாக இருக்கும்
கரோனா தொற்று மற்ற பல துறைகளைப் போலவே, கடல் உணவு துறையையும் கடுமையாக பாதித்துள்ளது. இருப்பினும், நமது கடல் பொருள்கள் ஏற்றுமதி மீண்டு வருகிறது. அதனால், இந்தாண்டு ஏற்றுமதி இன்னும் சிறப்பாக இருக்கும்" என நம்பிக்கை அளித்தார்.