மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட ஆறு மாநில விவசாயிகள் டெல்லி சலோ போராட்டம் நடத்திவருகின்றனர். கடந்த மூன்று நாள்களாகத் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றுவருகிறது.
நவ. 26ஆம் தேதியன்று போராட்டம் தொடங்கியபோது, விவசாய போராட்டக் குழுக்களைக் கலைக்கவும், டெல்லி செல்வதைத் தடுக்கவும் காவல் துறையினர் தண்ணீர் பீரங்கிகளைப் பயன்படுத்தினர். கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் விவசாயிகள் விரட்ட முயன்று அது முடியாமல் போக காவல் துறையினர் தடியடி நடத்தினர்.
எனினும், டெல்லிக்குச் செல்வதில் விவசாயிகள் உறுதியாக இருந்த நிலையில், விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதற்குக் காவல் துறை அனுமதி அளித்தது. விவசாயிகள் டெல்லி புராரி பகுதியில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட்டனர்.விவசாயிகள் விரோத புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் போராடும் விவசாயிகள் மீதான அடக்குறைகளை தன்னாட்சி அமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லியில் நடந்துவரும் விவசாயிகள் போராட்டம், மக்களாட்சி இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை மெய்ப்பிக்கிறது. தங்கள் வாழ்வாதாரத்தைப் பெருமளவு பாதிக்கும், ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம்-2020 உள்ளிட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், மின்சாரத் திருத்த மசோதா-2020 க்கு எதிராகவும் துவக்கம் முதலே குரல் கொடுத்து வருகிறார்கள் நம் விவசாயிகள்.
வேளாண் சீர்திருத்தச் சட்டங்கள் என்று சொல்லப்படுகிற மூன்று சட்டங்களும், வேளாண்மையைச் சீர்திருத்த அல்ல, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய வேளாண் சந்தையில் ஆதிக்கம் செலுத்தவே கொண்டு வரப்பட்டுள்ளன என்றும், இவை விவசாயிகளை மட்டுமல்லாமல் வெகுஜன மக்களையும் கடுமையாக பாதிக்கும் என்றும் இந்தத் துறையை அணுக்கமாகக் கவனித்து வரும் வல்லுநர்கள் கருதுகிறார்கள். அதனால்தான், இன்று பல நூறு கிலோ மீட்டர் பயணித்து, தலைநகரில் தங்கள் கோரிக்கைகளுக்காக குரலெழுப்பி வருகிறார்கள் இந்திய விவசாயிகள்.
வேளாண்மை, ஊரக உள்ளாட்சிகளுடன் நேரடியாகத் தொடர்புடையது. எளிய மக்களுக்கான அதிகாரங்களை உறுதிப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்துடன், 73ஆவது மற்றும் 74ஆவது அரசியல் சாசனத் திருத்தச் சட்டங்கள் மூலம், மூன்றாவது அரசாங்கங்களாக இயங்கக்கூடிய ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அரசாங்கங்கள் அமைக்கப்பட்டன. குறிப்பாக, கிராம ஊராட்சிகளுக்கு 11ஆவது அட்டவணை மூலம், இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள 29 முக்கிய பொறுப்புகளில், வேளாண்மை முதன்மையானது. ஓர் ஊராட்சி, தனது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வேளாண்மையை முறைப்படுத்தவும் பாதுகாக்கவும் கடமைப்பட்டுள்ளது.