சென்னை:தியாகராயநகர் வைத்தியராமன் தெருவில் அமைந்துள்ளது பாஜக மாநிலத் தலைமை அலுவலகமான கமலாலயம்.
இன்று (10.02.2022) அதிகாலை 1.20 மணிக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் 3 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பி ஓடி விட்டார். காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு அடையாளம் தெரியாத நபர் தப்பி ஓடியுள்ளார்.
தகவலறிந்து விரைந்த மாம்பலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தடயங்களைச் சேகரித்தனர். இதனையடுத்து தியாகராயநகர் காவல் துணைஆணையர் ஹரி கிரண் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார். அப்போது பணியில் இருந்த காவலரிடம் விசாரணை நடத்தினார்.
சரித்திரப்பதிவேடு குற்றவாளி கருக்கா வினோத்தின் நீட் எதிர்ப்பு மனநிலை
அதன்பின் அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டது. அதில் பதிவான அடையாளத்தை வைத்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் நந்தனத்தைச் சேர்ந்த வினோத் என்ற கருக்கா வினோத் தான், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது என காவல்துறையினர் கண்டறிந்து கைது செய்தனர்.
கைதான ரவுடி கருக்கா வினோத் நந்தனம் எஸ்.எம்.நகரில் வசித்து வருகிறார். இவர் தமிழ்நாட்டில் நீட் தேர்வு தொடர்பாக பாஜக-வின் நிலைப்பாட்டைக் கருத்தில் கொண்டு ஆத்திரத்தில் பாஜக மாநிலத் தலைமை அலுவலகத்தில் 3 பெட்ரோல் குண்டுகளை வீசியதாக கருக்கா வினோத் வாக்குமூலம் அளித்துள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
பெட்ரோலைத் திருடி... தயாரிக்கப்பட்ட பெட்ரோல் குண்டு
முதற்கட்ட விசாரணையில் இவர் மத ரீதியாகவோ, அரசியல் சம்பந்தமாகவோ இந்த சம்பவத்தில் ஈடுபடவில்லை என்பதும், இவர் இவ்வாறு பொது பிரச்னையில் தானாகவே தலையிட்டு குடிபோதையில் இதனை செய்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் ரவுடி கருக்கா வினோத் தான் வசிக்கும் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கில் இருந்து, பெட்ரோலைத் திருடி வந்தது காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்தது.
பெட்ரோல் குண்டு வீசப்பட்டு மீதம் இருந்த பெட்ரோலை கருக்கா வினோத், நந்தனம் எஸ்.எம். நகரில் உள்ள மாநகராட்சி பொதுக்கழிப்பிடம் அருகில் மறைத்து இருந்தது தெரிந்தது. அதனை மாம்பலம் காவல் துறையினர் கைப்பற்றினர்.
தொடர் விசாரணையில், கருக்கா வினோத் தேனாம்பேட்டை காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி. இவர் மீது ஏற்கெனவே 4 கொலை முயற்சி வழக்குகள் உட்பட சுமார் 10 குற்ற வழக்குகள் உள்ளன.
ஏற்கெனவே 2015ஆம் ஆண்டு சென்னை தியாகராயநகர் - தெற்கு போக் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி, டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டை வீசியதும், 2017ஆம் ஆண்டு தேனாம்பேட்டை காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டை வீசிய சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.