சென்னை: நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை தலைமைச் செய்தியாளர்ககளை சந்தித்தார். அப்போது, “தமிழ்நாடு அரசின் திட்டங்களுக்கு செயல்படுத்தப்படும் நிதிகளை கணக்கிடுவதற்கும், கண்காணிப்பதற்கும் அரசு சார்பில் மூத்த அலுவலர்கள் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டது.
அந்த குழுவின் அடிப்படையில் முடங்கியுள்ள பணங்களை மீட்டெடுக்கவும், செலவு செய்யாத திட்டத்தின் நிதிகளை மீட்டெடுக்கவும், அதிகாரமில்லாத நீதிகளை மீட்டெடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசால் மூத்த அலுவலர்கள் கொண்டு அமைக்கப்பட்ட சிறப்பு குழு மூலம் ஆய்வு செய்ததில் 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் திட்டங்களுக்காக செலவு செய்யப்படாத தொகைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
சிறப்பு சலுகை திட்டங்கள்
இக்குழுவின் மூலம் பயிர்க்கடன் தள்ளுபடியிலுள்ள குளறுபடிகள் கண்டறியப்பட்டுள்ளது. நகைக் கடன் தள்ளுபடியில் கணிசமான தொகை தவறான கடன் பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு பணப் பயன்கள் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆயிரத்து 200 கோடி ரூபாய் தேசிய மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை நிதியாக ஒதுக்கப்பட்டது. ஆனால், இது சரியான முறையில் செலவு செய்யப்பட்டது என்பதற்கான எந்த தகவலும் இல்லை.
முதலமைச்சரின் பொருளாதார ஆலோசனைக் குழு அளித்த பல்வேறு முக்கிய பரிந்துரைகள் மீது இந்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் முதியோர் ஓய்வூதியத் திட்டத்தினை விரிவுபடுத்துதல், இல்லம் தேடி கல்வி, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான சிறப்பு சலுகை திட்டங்கள் ஆகியவை இதில் அடங்கியுள்ளது.
நகைக் கடன் பெறுவோர் அதிகரிப்பு
அதிமுக ஆட்சியில் திட்டங்களை செயல்படுத்தும் "சிஸ்டம்" சரியான முறையில் இல்லை. கடந்த ஆட்சியில் 110 விதியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்காக நிதி சரியான முறையில் ஒதுக்கப்படாததால் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது. சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் கடன் பெற ஏதுவாக அவர்கள் பெரும் கடனுக்கு மாநில அரசு உத்தரவாதம் அளிக்கும்.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த ஆட்சியில் முதியோர் உதவித் திட்டத்தில் இறந்தவர்களின் பெயர்களின் மூலம் நிதியுதவி பெற்றது கண்டறியப்பட்டுள்ளது. கடந்தாண்டை விட இந்தாண்டு தமிழ்நாட்டில் நகைக்கடன்கள் பெறுவது அதிகரித்துள்ளது. குறிப்பாக சேலம் மாவட்டத்தில் நகை கடன் பெறுவது மிகவும் அதிகமாக உள்ளது. தவறான தகவல் கொடுத்து நகைக்கடன் பெற்றவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி நிறுத்திவைக்கப்படும்" என்றார். இதனிடையே 6,000 கோடி ரூபாய்க்கான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:வன்னியர் இட ஒதுக்கீடு: சட்டமும் ரத்து, ஒதுக்கீடும் ரத்து!