ஊராட்சி தேர்தல் முடிந்த பின் அந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவருக்கு ஊராட்சித் தலைவராக பதவிப் பிரமாணம் நடைபெறும். அதன் பிறகு ஊராட்சித் துணைத் தலைவருக்கான தேர்தல் நடக்கும். அதில், வார்டு உறுப்பினர்கள் பங்கேற்று அவர்களில் ஒருவரை ஊராட்சித் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஒருவேளை அந்தத் தேர்தலில் போட்டியாளர்கள் அனைவரும் சமமான வாக்குகள் பெற்றிருந்தால் ஊராட்சித் தலைவர் தனது வாக்கினை யாராவது ஒருவருக்கு செலுத்துவதன் மூலம் ஊராட்சித் துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
ஊராட்சியின் துணைத் தலைவர் ஊராட்சித் தலைவருக்கு பக்கபலமாக இருந்து அனைத்து பணிகளிலும் இணைந்து செயல்பட வேண்டும். அனைத்து நிதி பரிவர்த்தனை உட்பட அனைத்திலும் பங்கெடுத்து, அதற்கான காசோலையில் கையொப்பமிடவும் அவருக்கு அதிகாரம் உண்டு.
வார்டு உறுப்பினர்களின் பணி
வார்டு உறுப்பினர்கள் தங்களது வார்டுகளுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த ஊராட்சியின் வளர்ச்சிக்காக பணியாற்ற வேண்டும். முக்கியமாக தங்கள் வார்டு மக்களின் கோரிக்கைளை, தலைவரிடம் எடுத்து சொல்வது, ஊராட்சி வளர்ச்சி திட்டத்தில் தனது வார்டு மக்கள் கோரிக்கைகளை இணைப்பது உள்ளிட்ட பணிகளை செய்வார்.
முக்கியமாக,. மாதம்தோறும் நடக்கும் ஊராட்சி மன்றக் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொண்டு வார்டு மக்களின் கோரிக்கைகளை தீர்மானமாக நிறைவேற்றி அதனை நடைமுறைப்படுத்த பணி செய்ய வேண்டும். மேலும், ஊராட்சியில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்தும், கிராம சபையில் பங்கேற்பதன் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.
அதுமட்டுமின்றி, ஊராட்சியின் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் தனி நபர்கள், நிறுவனங்கள் மீது ஊராட்சி மன்றம் நடவடிக்கை எடுக்க ஊராட்சி மன்றத்திடம் வலியுறுத்தி அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
இதையும் படிங்க:
உள்ளாட்சி உங்களாட்சி 9 - ஊராட்சித் தலைவரின் பணிகள்