தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

உள்ளாட்சி உங்களாட்சி 6 - நிலைக்குழுக்களின் பங்கு என்ன

உள்ளாட்சி உங்களாட்சியின் கடந்த பகுதியில் கிராமசபைகளின் பங்கு குறித்து பார்த்தோம். தற்போது நிலைக்குழுக்களின் பங்கு என்ன என்பதைப் பார்ப்போம்.

உள்ளாட்சி
உள்ளாட்சி

By

Published : Nov 29, 2019, 11:42 AM IST

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வழிகாட்டுதலில் தமிழ்நாடு ஊராட்சி சட்டத்தில் நிலைக்குழுக்கள் அமைக்கப்பட்டன. ஒரு ஊராட்சியில், நியமனக் குழு, வளர்ச்சிக் குழு, வேளாண்மை மற்றும் நீர் ஆதாரக் குழு, பணிக் குழு, கல்விக் குழு என மொத்தம் ஐந்து நிலைக்குழுக்கள் இருக்கின்றன.

ஊராட்சி நிர்வாகம் முறையாகச் செயல்படுவதற்கு இந்த நிலைக்குழுக்கள் துணைபுரிகின்றன. ஊராட்சி நிர்வாகம் என்பது அந்த ஊராட்சியின் தலைவர் மற்றும் வார்டுகளின் உறுப்பினர்களை மட்டுமே கொண்டதல்ல. அந்த நிர்வாகத்தின் பொறுப்புகளைப் பகிர்ந்தளிக்க இந்த நிலைக்குழுக்கள் பங்காற்றுகின்றன என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

இந்த குழுக்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்து அந்த ஊராட்சிக்குத் தேவையான பரிந்துரைகளைக் கொடுத்து அதனைச் சரியாக செயல்படுத்தப் பங்காற்றுவார்கள்.

ஐந்து நிலைக்குழுக்களில் எந்த நிலைக்குழுவில் இணைந்தால் ஊராட்சிக்கு சிறந்த முறையில் பரிந்துரைகளையும், உதவிகளையும் செய்ய முடியும் என்பதை தெரிந்துகொன்டு ஊராட்சித் தலைவரிடம் விண்ணப்பத்தைக் கொடுத்துவிட்டு அந்த நிலைக்குழுவில் இணைந்துகொள்ளலாம். நிலைக்குழுக்களில் ஒன்றான நியமனக் குழுவில் ஊராட்சியின் தலைவரும், இரண்டு வார்டு உறுப்பினர்களும் இருப்பார்கள்.

அதேபோல் மற்றொரு நிலைக்குழுவான வளர்ச்சிக் குழுவுக்கு பெண் வார்டு உறுப்பினர் ஒருவர் தலைவராக இருப்பார். மேலும், அதில் வார்டு உறுப்பினர்கள், சத்துணவுத் திட்டப் பணியாளர், பள்ளித் தலைமை ஆசிரியர், சமூக ஆர்வலர், சுய உதவிக் குழு உறுப்பினர், கிராமச் சுகாதார செவிலி ஒருவர், ஊரக நலத்துறை அலுவலர் ஒருவர், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் செயலர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

ஊராட்சியில் இயங்கும் அனைத்து அமைப்புகளையும் கள ஆய்வு செய்வதற்கான அதிகாரம் உள்ளது. உதாரணமாக, சுகாதாரம், குடிநீர், நியாய விலைக் கடை பொருட்கள் முறையாக மக்களுக்கு சென்றடைகிறதா என்பதை இவர்கள் கள ஆய்வு செய்து உறுதிப்படுத்துவார்கள். அதுமட்டுமின்றி, கிராம வளர்ச்சி சார்ந்த அனைத்து பணிகளையும் இந்த குழுவானது கண்காணிக்க வேண்டும்.

ஊராட்சி உறுப்பினர்களுள் ஒருவரின் தலைமையிலான கல்விக் குழுவில், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர், சுய உதவிக்குழு உறுப்பினர் உள்ளிட்ட ஐந்து பேர் இருப்பார்கள்.

இவர்களின் முக்கிய பணி ஊராட்சியில் உள்ள பள்ளி மற்றும் நூலகங்களின் கட்டுமானங்களை மேம்படுத்த வேண்டும். குறிப்பாக தற்போது பல ஊராட்சிகளில் நூலகம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே வரும் உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகாவது அமையவிருக்கும் கல்விக் குழு அந்தந்த ஊராட்சியில் நூலகத்தை அமைக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே சமூக செயற்பாட்டாளர்களின் கருத்து. ஏனெனில், நூலகம் இல்லாத ஊர் அறிவு பஞ்சத்தில் அடித்துச்செல்லப்படும் அபாயம் இருக்கிறது.

நிலைக்குழுக்களில் மற்றொரு குழுவான வேளாண்மை மற்றும் நீர் ஆதாரக் குழுவில் ஊராட்சி உறுப்பினர்களில் பொதுப் பிரிவு உறுப்பினர், பட்டியலின வகுப்பைச் சேர்ந்த உறுப்பினர், கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) உள்ளிட்ட ஆறு பேர் இருப்பார்கள். இந்தக் குழுவானது அனைத்து வகையான நீர் நிலைகளை மேம்படுத்துதல், வேளாண்மை சார்ந்த பணிகளை மேற்கொண்டு கிராம மக்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்க முக்கியப் பங்காற்றுகிறது.

அதேபோல், பணிக்குழுவானது மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் கிராமத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் என அனைத்து திட்டங்களும் மக்களுக்கு முறையாக செல்கிறதா என்பதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இந்த குழுவிலும், ஊராட்சி உறுப்பினர்களில் பொது பிரிவு உறுப்பினர், பட்டியலின வகுப்பைச் சேர்ந்த உறுப்பினர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

ABOUT THE AUTHOR

...view details