சென்னை: அரசியலமைப்பு சட்ட தினம் கொண்டாட அனைத்து கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழு நாடு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “1949ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தை நம் நாடு செயல்படுத்திய நவம்பர் 26ஆம் தேதியை நினைவுக்கூறும் வகையில் ‘சம்விதான் திவாஸ்’ என்கிற பெயரில் அரசியலமைப்புச் சட்டத்தின் தினத்தை மத்திய அரசு கடைபிடித்து வருகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டும் அந்த தினத்தை கடைபிடிக்கும் வகையில் நாட்டிலுள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் பங்கெடுக்க வேண்டுமென பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது. அதன்படி அன்றைய தினம் அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையை, கல்லூரிகள் பல்கலைக்கழகங்களிலுள்ள பேராசிரியர்கள், மாணவர்கள் காலை 11 மணியளவில் உறுதிமொழி எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்ட கடிதம் கரோனா காரணமாக நாடு முழுவதும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நவம்பர் 26ஆம் தேதியன்று பிரதமர் மோடி அரசியலமைப்பு சட்ட தினத்தில் பங்கேற்று அரசியலமைப்பு சட்டத்தின் முகவுரையை வாசிக்கவுள்ளார். இதனை பின்பற்றி பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் இந்த நிகழ்வை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அப்போது அரசின் கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி இந்த நிகழ்வை நடத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.