தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 150-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் திமுக மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. இதன்மூலம் வரும் மே 6ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராகப் பதவியேற்கிறார்.
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தேசிய தலைவர்கள் சரத்பவார், தேஜஸ்வி யாதவ், அகிலேஷ் யாதவ், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், திரையுலகினர் உள்ளிட்ட பலரும் வாழ்த்துத் தெரிவித்துவருகின்றனர்.
பரிசு பொருளான எய்ம்ஸ் மருத்துவனையின் செங்கல்
திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எய்ம்ஸ் எழுத்துகள் உள்ள செங்கல்லை ஸ்டாலினுக்கு பரிசாக வழங்கி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அந்தப் புகைப்படத்தை ட்விட்டரிலும் பதிவிட்டுள்ளார்.
தற்போது இந்தப் பதிவு வைரலாகிவருகிறது. சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் முதன்முறையாகப் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றுள்ளார்.
உதயநிதியின் கூடவே பயணிக்கும் செங்கல்
தனது தேர்தல் பரப்புரையின்போது நாசுக்காக அதிமுக-பாஜகவை கலாய்த்த உதயநிதிக்கு ஹைலைட் கான்செப்ட்டே செங்கல்தான். எங்கு பரப்புரைக்குச் சென்றாலும் கூடவே ஒரு செங்கலை எடுத்துச் செல்வார்.
பரப்புரையின்போது அதை மக்கள் மத்தியில் எடுத்துக்காட்டி, “உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? மதுரையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அதிமுகவும் பாஜகவும் சேர்ந்து மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக் கட்டிக் கொடுத்தார்கள். அதை கையோடே எடுத்து வந்துள்ளேன்” என்ற அவரின் பேச்சு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதற்காக பாஜக தரப்பில் உதயநிதி மீது புகார் அளிக்கப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது.
எய்ம்ஸ் - எப்போது?
மேலும் பரப்புரையின்போது திமுக ஆட்சிக்கு வந்தால் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வேகமாகக் கட்டி முடிக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். இன்னும் சில நாள்களில் திமுகவும் ஆட்சிக்கு வரப் போகிறது. அப்போதாவது எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.