கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் கடைகளைத் திறக்கவும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஊரடங்கின்போது அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி, கடையைத் திறந்து, வைத்ததாக குற்றஞ்சாட்டி காவல் துறையினர் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில், கோவில்பட்டி கிளைச்சிறையில் வைக்கப்பட்டிருந்த இருவரும் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ்நாட்டில் தொடர்ந்து வரும் லாக்அப் மரணங்கள் குறித்து பல்வேறு தரப்பினரும்; தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்தச் சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள திமுக, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் நிதியுதவியாக அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
இந்நிலையில், திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், "ஜெயராஜ், பென்னிக்ஸை கொன்றவர்கள் நேரடி குற்றவாளிகள் என்றால், அவர்களின் உடல் காயங்களைப் பார்த்து மருத்துவமனைக்கு பரிந்துரைக்காத மருத்துவர்கள், அந்த காயங்களைப் பதிவு செய்யாத மாஜிஸ்திரேட், காவல் துறையின் குற்ற நடவடிக்கைக்கு ஆதரவு தந்த சிறைத்துறை அதிகாரி ஆகியோரும் இக்குற்றத்துக்கு துணைபோனவர்களே.
இவர்களையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். அதற்கு முன்பாக கொலை வழக்குப் பதிவுசெய்து கொலையாளிகளை கைதுசெய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே மக்களின் எதிர்பார்ப்பு. மற்றபடி சஸ்பெண்ட், பணியிடமாற்றம், காத்திருப்புப்பட்டியல் என்பது வெறும் கண்துடைப்பே!" என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.
மற்றொரு ட்வீட்டில், "ட்ரோன் விட்டனர். முட்டிபோடவைத்தனர். இம்போசிஷன் எழுத வைத்தனர். அன்று சிரித்தோம். மதுரை அப்துல் ரஹீமை கொன்றனர்; கோவை தள்ளுவண்டி சிறுவனைத் தாக்கினர்; உச்சமாக ஜெயராஜ்-பென்னிக்ஸை கொன்றுள்ளனர். இன்று அழுகிறோம். தவறை முதல் புள்ளியிலேயே தடுக்க-தட்டிக்கேட்க வேண்டும்" என்றும் உதயநிதி பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: காவல்துறையினரின் இந்த செயல் ஒரு பெருங்குற்றம் - சாத்தான்குளம் சம்பவம் குறித்து ராகுல் காந்தி