பல்லாவரம் அடுத்த பம்மல், அனகாபுத்தூர், பொழிச்சலூர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து இரு சக்கர வாகனங்கள் காணாமல் போவதாக சங்கர்நகர் காவல்துறையினருக்கு புகார் வந்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் சங்கர்நகர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் பசுபதி தலைமையில் மூன்று பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு, அவர்கள் குற்றவாளிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இருசக்கர வாகனம் காணாமல்போன எந்த இடத்திலும் சிசிடிவி கேமரா இல்லாததால் குற்றவாளிகளைப் பிடிப்பது காவல் துறையினருக்கு சவாலாகவே இருந்தது. தொடர்ந்து இரு சக்கர வாகனம் திருடுபவர்களில், பழைய குற்றவாளிகளின் குறிப்புகளை எடுத்து ஆராய்ந்து பார்த்ததில் நாகல்கேணி, ஆதாம் நகரைச் சேர்ந்த வினோத் குமார்(20) என்பவர் பல மாதங்களாக இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
இதனை அடுத்து சங்கர் நகர் காவல் துறையினர் வினோத்தை தேடி வந்தனர். அப்போது வினோத்குமார் மடிப்பாக்கத்தில் இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து தனிப்படையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று, இரண்டு நாள்களாக மடிப்பாக்கம் பகுதி முழுவதும் தேடி வந்தநிலையில் வினோத்குமார் அங்கு தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து காவல் துறையினர் வினோத்குமாரை சுற்றி வளைத்து அவரது வீட்டில் கைது செய்யும் பொழுது அவருடன் சேர்ந்து அவரது நண்பர்கள் இருவரையும் கைதுசெய்தனர்.