கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகப் பேச சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விசுவநாதன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”பொதுமக்கள் அனைவரும் ஊரடங்கு உத்தரவின் முக்கியத்துவத்தை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். மேலும் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து தேவையின்றி வெளியே வருகின்றனர். அதைத் தவிர்க்க வேண்டும்.
அவர்கள் இருக்கும் பகுதியிலுள்ள கடைகளிலேயே பொருள்கள் வாங்க வேண்டும்.மேலும் இடைவெளி விட்டு கடைகளில் நிற்க வேண்டும். பொதுமக்கள் நிச்சயம் ஒத்துழைப்பு தர வேண்டும்.குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் தேவையின்றி வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும். பெரும்பாலான தமிழ்நாட்டு மக்கள் ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு வழங்குவதால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமில்லை.