ஈரோடு அடுத்துள்ள புளியம்பட்டியைச் சேர்ந்தவர்கள் கவிதாமணி, ஜெயக்குமார். இவர்களுக்கு, வெவ்வேறுவருடன் திருமணம் நடந்த நிலையில், இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, இருவரும் சென்னையில் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.
இதையடுத்து, கவிதாமணியை காணவில்லை என்று அவரது உறவினர்கள் புளியம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் கவிதாமணி, ஜெயக்குமாருடன் கொண்ட திருமணம் மீறிய உறவு காரணமாக ஊரைவிட்டுச் சென்றது தெரியவந்தது.
அதன்பிறகு காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, புளியம்பட்டி காவல்துறையினர் சென்னைக்கு சென்று இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்வதற்காக காரில் அழைத்து வரும்போது, திடீரென்று இருவரும் மயங்கி விழுந்தனர்.
இதையடுத்து, இருவரையும் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் காவல்துறையினர் அனுமதித்தனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர்கள் ஏற்கனவே விஷம் அருந்தியது தெரியவந்தது. பின்னர், சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.