சென்னை:கொடுங்கையூர் காவல்நிலைய காவலர் லட்சுமணன் என்பவர் கடந்த செப்.27 ஆம் தேதி, இரவு வழக்கு ஒன்றிக்காக சம்மன் அளிக்க சென்றபோது, மதுபோதையில் இருந்த ரவுடி செந்தில் என்பவர், லட்சுமணனிடம் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கியதோடு, அவரின் இருசக்கர வாகனத்தின் சாவியையும் பறித்துகொண்டார். இதனால் காவலர் லட்சுமணன், சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், செந்தில் போலீசாரால் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதேபோல, செப்.30 ஆம் தேதி சென்னை அமைந்தகரையில் ரவுடி வினோத்தை பிடிக்க சென்றபோது, அவரது தாய் லதா போலீசாருடன் சண்டையிட்டு, தன் மீதும், பிடிக்க சென்ற உதவி ஆய்வாளர் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. இதில் ரவுடி வினோத் தப்பி விட, லதா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதேபோல, கடந்த அக்.10 ஆம் தேதி அண்ணாசாலை தாயார்சாகிப் தெருவில் பாலாஜி என்ற காவலர் மதுபோதையில் வந்த மூன்று இளைஞர்களால் தாக்கப்பட்டு கழுத்து மற்றும் கையில் அறுபட்டநிலையில் ரத்தம் கொட்டியபடி இருந்த பாலாஜியை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் காவலர் பாலாஜியை பிளேடால் அறுத்த, கல்லூரி மாணவர் சையது பயாஸ்(21), சையது சாலாஜாத்(20) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய சையது ரபீக்(21) இன்னும் கைது செய்யப்படவே இல்லை.
இதேபோல, அக்.10 ஆம் தேதி இரவு ஆலந்தூரில் ரவுடிகள் நடத்திய வன்முறையில் போலீசாரின் வாகனத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்விதமான காயமும் உயிர் இழப்பும் ஏற்படவில்லை. இதில் 19 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் காயமடைந்தோரில் சிலருக்கு மாவுக்கட்டுகளும் போடப்பட்டன.
இந்நிலையில் தான் நேற்று முன்தினம் (அக்.15) இரவு சென்னை ஜெஜெ நகர் ரவுண்ட் பில்டிங் அருகே மதுபோதையில் இருவர் தகராறில் ஈடுபட்டதாக வந்த தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற ரோந்து போலீசார் மீதும், ரோந்து வாகனத்தின் மீதும் அவ்விருவரும் கற்களை வீசித் தாக்கியுள்ளனர்.
போலீசாருக்கு பாட்டில் குத்து:இதனையடுத்து காவல் நிலையத்திற்கு கொடுத்த தகவலின் பேரில், காவலர்கள் நந்தக்கோபால் மற்றும் ராயப்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அவர்களை பார்த்ததும் இருவரும் தப்பியோட முயன்றுள்ளனர். நந்தக்கோபால் ஒருபுறமும், மற்றொரு புறம் ராயப்பனும் நின்று கொண்டு பிடிக்க முயன்றபோது பாட்டில் மணி தனது கையில் வைத்து இருந்த பாட்டிலை உடைத்து நந்தக்கோபாலின் முகத்தில் குத்தியதில் மூக்கில் இருந்து கண்பகுதி வரை காயம் ஏற்பட்டது.
தன்னைக் காயப்படுத்தியவருக்கும் உதவிய மனம்:இதனையடுத்து அங்கிருந்து தப்பிக்க முயன்ற பாட்டில் ரவுடி மணி, போலீசார் துரத்தியதில் கீழே விழுந்து வலதுகால் எலும்பில் முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து காயமடைந்த போலீசார் நந்தக்கோபாலுக்கு அறுவை சிகிச்சை நடந்தது. மற்றொரு போலீசார் ராயப்பனுக்கு காதில் ஏற்பட்ட காயத்திற்கு தையல் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. காதில் காயம் ஏற்பட்ட போதிலும் காவலர் ராயப்பன் பாட்டில் மணியை அலேக்காக தூக்கிக்கொண்டு வீல் சேரில் அமரவைத்து மாவுக்கட்டு போட மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
போலீசார் மீது அதிகரிக்கும் தாக்குதல்கள்:இந்த பாட்டில் மணி கஞ்சா வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியாகவும், ஜெஜெ நகரில் சரித்திரப்பதிவேடு குற்றவாளியும் ஆவார். இதுபோல முன்னதாக, கடந்த சில வருடங்களுக்கு முன்பு அமைந்தகரை காவல்நிலையத்தில் போலீசார் பிடிக்க சென்றபோது, உதவி ஆய்வாளர் ஒருவரை பாட்டிலால் குத்தியுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவை அனைத்தும் கடந்த 20 நாட்களில் சென்னையில் போலீசார் மீது சமூக விரோதிகளால் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களில் சில மட்டுமே.
ஆட்பற்றாக்குறை காரணமா?மக்கள் நலப்பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு பணியாற்றி வரும் தமிழ்நாடு போலீசார், இவ்வாறாக அவ்வப்போது பெரும் சிரமத்திற்கு ஆளாகும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில், தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதால் போலீசார் இரவில் ரோந்து செல்லவே அச்சப்படும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். காவல்துறையில் நிலவும் ஆட்பற்றாகுறை காரணமாக, இரவு நேரத்தில் குறைவான காவலர்களே இப்பணிகளில் இருப்பதாலும், குற்றவாளிகளை போலீசார் அடிக்கக்கூடாது என மனிதாபிமானம் அடிப்படையில் காவல்துறை உயர் அதிகாரிகள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர். இத்தகைய நிலையில், சமூக விரோதிகளுக்கு போலீசாரின் மீதான அச்சம் இல்லாமல் போயின.
இக்காரணங்களால், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைப்பெற்றுகொண்டே தான் இருக்கின்றன. இவ்வாறாக, காவல்துறை மீது தாக்குதல் நடைப்பெறாமல் காவல்துறையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே ஒட்டுமொத்த காவல்துறையின் வேண்டுகோளாக எழுந்துள்ளது.
இதையும் படிங்க: இந்திய எல்லைக்குள் மீன்பிடித்த "இலங்கை மீனவர்கள்" கைது!