சென்னை: வியாசர்பாடி புது நகரைச் சேர்ந்தவர் அப்துல் ரஹீம். இவர் தரமணி சட்டக்கல்லூரியில் 5ஆம் ஆண்டு படித்துவருகிறார். இவர் கடந்த 13ஆம் தேதி நள்ளிரவு கொடுங்கையூர் எம்.ஆர். நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்தபோது காவலர்கள் தடுத்து நிறுத்தி முகக்கவசம் அணியாமல் சென்றதாக வழக்குப்பதிவு செய்து அபராத தொகையைக் கட்ட கூறினர்.
அதற்கு ரஹீம், சமூக விரோதிகளைப் பிடிக்க துப்பு கிடையாது எனக் காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, காவலர் ருத்திரகுமரன் என்பவரை கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படுகிறது.
காவலர்களின் அத்துமீறல்
இதையடுத்து அரசு ஊழியரைப் பணிசெய்ய விடாமல் காவல் துறையினரைத் தாக்கியதாக ரஹீமை கொடுங்கையூர் காவலர்கள் கைதுசெய்தனர்.
இந்நிலையில், இரவு முழுவதும் காவல் நிலையத்தில் தன்னை நிர்வாணமாக்கி பூட்ஸ் காலால் மார்பில் எட்டி உதைத்து காயப்படுத்தி காவல் துறையினர் கொடுமைப்படுத்தியதாகக் கைதான சட்டக்கல்லூரி மாணவர் ரஹீம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மேலும் 10-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், சட்டம் பயிலும்மாணவர்கள் காவல் நிலையத்தில் புகுந்து ரஹீமுக்கு நேர்ந்த கொடுமை தொடர்பாக காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகள் வெளியாகின.
துறைரீதியான நடவடிக்கை
அந்தக் காணொலியில் ரஹீம், அன்றிரவு முகக் கவசம் அணிந்துவந்ததாகவும், ஒழுங்காக அணியவில்லை எனக் காவல் துறையினர் அபராதத் தொகை செலுத்த கூறியதாகவும், அதற்கு முடியாது எனக்கூறி பார்மசியில் வேலைப்பார்க்கும் ஐடி, சட்டக்கல்லூரி மாணவர் எனக் கூறியதால் அசிங்கமாகத் திட்டி வழக்குப்பதிவு செய்து காவல் நிலையத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்துவந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இரவு முழுவதும் காவலர்கள் வரம்பு மீறி நடந்துகொண்டு சித்திரவதை செய்ததாகவும் ரஹீம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், குற்றச்சாட்டுக்குள்ளான கொடுங்கையூர் காவல் நிலைய காவலர்கள் பூபாலன், ருத்திரகுமரன் ஆகியோரைக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து சென்னை காவல் துறை மேற்கு மண்டல இணை ஆணையர் ராஜேஸ்வரி தலைமையில் துறைரீதியிலான விசாரணை நடத்தப்பட்டது.
பணியிடை நீக்கம்
பின்னர் சம்பந்தபட்ட காவலர்களைப் பணியிடை நீக்கம் செய்து இணை ஆணையர் ராஜேஸ்வரி உத்தரவிட்டார். இதேபோல காவல் ஆய்வாளர்கள் ராஜன், நசீமா, கொடுங்கையூர் காவல் நிலைய எழுத்தரான ஹேமநாதன் ஆகியோர் மீது துறைரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தலைக்கவசத்துடன் கூடிய தபால் பெட்டி வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய அஞ்சல் துறையினர்!