சென்னை நெற்குன்றம் முனியப்பன் நகர் பகுதியில் வசித்து வருபவர் நாகம்மாள் (37). இவர் கடந்த 31ஆம் தேதி மதியம் விருகம்பாக்கம் சித்திரை தெரு சந்திப்பு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது அங்கு வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர் நாகம்மாளை கத்தியைக் காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த ஐந்தரை சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து, நாகம்மாள் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு அருகில் பொருத்தியிருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட நபர்கள் திருநெல்வேலியைச் சேர்ந்த செந்தில் குமார் (எ) கார்த்திக் (28), மதுரையைச் சேர்ந்த பாலமுருகன் (29) என்பது தெரியவந்து.
இதைத்தொடர்ந்து, அவர்கள் இருவரையும் காவல் துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து ஐந்தரை சவரன் தங்க நகையை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் செந்தில்குமார் (எ) கார்த்திக் மீது தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் எட்டு திருட்டு வழக்குகள் உள்ளதும், பாலமுருகன் மீது மதுரை மாவட்டத்தில் இரண்டு கொலை முயற்சி வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.