தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கிரெடிட் கார்டு மோசடி - இருவருக்கு சிறை

சென்னையில் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி கிரெடிட் கார்டு மூலம் பணம் மோசடியில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கிரெடிட் கார்டு மோசடி
கிரெடிட் கார்டு மோசடி

By

Published : Aug 1, 2021, 4:39 PM IST

சென்னை: மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரிடம் கடந்த ஆண்டு செல்போனில் பேசிய அறிமுகமில்லாத நபர் ஒருவர், எஸ்பிஐ வங்கியில் இருந்து பேசுவதாக கூறி கிரெடிட் கார்டில் பரிசு பொருள்கள் வந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், உடனடியாக கிரெடிட் கார்டு விவரங்களை கூறி, பரிசு பொருள்களைப் பெற்றுக்கொள்ளுமாறு கோவிந்தராஜிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனை நம்பிய கோவிந்தராஜ், தனது எஸ்பிஐ, ஹெச்டிஎப்சி வங்கி கிரெடிட் கார்டுகளின் விவரங்களையும், ரகசிய குறியீட்டு எண்களையும் கூறியுள்ளார்.

கிரெடிட் கார்டு மோசடி

சில நிமிடங்களிலே கோவிந்தராஜின் கிரெடிட் கார்டு கணக்கிலிருந்து 1லட்சத்து 8ஆயிரத்து 740 ரூபாய் பணம் எடுக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கோவிந்தராஜ், இது குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வங்கி மோசடி புலனாய்வுப் பிரிவினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, மோசடி செய்த கும்பலுக்கு உதவியாக இருந்த டெல்லி ஜோரிபூரைச் சேர்ந்த அதுல்குமார், காசியாபாத்தைச் சேர்ந்த குணால் ஆகியோரை நேற்று (ஜூலை 31) கைது செய்து, ஒரு லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

மோசடியில் ஈடுபட்ட இருவருக்கு சிறை

இதையடுத்து டெல்லி கர்கர்டூமா நீதிமன்றத்தில் இருவரையும் ஆஜர்படுத்தி, ட்ரான்சிட் ரிமாண்ட் உத்தரவுப்படி இன்று (ஆகஸ்ட் 1) எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், மோசடி கும்பல் டெல்லி, பீகார், ஜார்கண்ட் மாநிலங்களில் போலியான கால் சென்டர்கள் வைத்து தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் வசிக்கும் மக்களிடம் செல்போனில் பேசி பணம் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்தது.

மேலும், வங்கியில் இருந்து பேசுவதாகவும், தங்களுக்கு பரிசு பொருள்கள் விழுந்திருப்பதாகவும் கூறி, பொதுமக்களின் கிரெடிட் கார்டு எண்கள், ரகசிய குறியீட்டு எண்களை பெற்றுக் கொள்கின்றனர்.

காவல் துறை விசாரணை

பின்னர், டெல்லியில் ஏஜென்சிகள் மூலம் மின் கட்டணம் செலுத்துவோரின் மின்கட்டன விவரங்களை பெற்றுக்கொண்டு, தமிழ்நாட்டில் பொதுமக்களிடம் இருந்த பெற்ற கிரெடிக் கார்டு விவரங்கள் மூலம் அந்த மின் கட்டணங்களை செலுத்துகின்றனர்.

மேலும், அந்த ஏஜென்சிகளுக்கு அதிகப்படியான பணத்தை ஆன்லைன் மூலம் கொடுத்துவிட்டு, அவர்களிடமிருந்து ரொக்கமாக பணத்தைப் பெற்றுக்கொள்கின்றனர்.

இத்தகைய மோசடி செயல்களில் ஈடுபட்டு வரும் கும்பலை தனிப்படை காவல் துறையினர், தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், செல்போன், டிடிஎச் ரீசார்ஜ் போன்றவற்றின் மூலமாக மோசடி நடந்துள்ளதா என்பது குறித்தும் காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பிரபல நகைக் கடை பெயரில் போலி ரசீது - காவல்நிலையத்தில் புகார்!

ABOUT THE AUTHOR

...view details