சென்னை:தமிழ்நாட்டில் காந்தி ஜெயந்தியொட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் முதல்முறையாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் மொபைல் ஆப் மூலம் உடனடியாக பெறப்பட்டன. இந்த கிராம சபைக் கூட்டங்களில் கலந்து கொண்ட நபர்களின் எண்ணிக்கை, கிராம சபை புகைப்படம் உள்ளிட்டவை ஆப் மூலம் பெறப்பட்டதால் மொத்தம் உள்ள 12,525 கிராம பஞ்சாயத்துக்களில் 14 பஞ்சாயத்துகள் தவிர 12,511 கிராம் ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த கிராம சபை கூட்டங்களின்போது, ஊராட்சியில் நடைபெற்ற வரவு செலவு கணக்குகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. அப்பகுதியின் மேம்பாட்டிற்கான திட்டங்கள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டன. ஒரு சில பகுதிகளில் அரசின் திட்டத்திற்கு எதிராகவும் தீர்மானம் நடைபெற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
கிராம சபைக் கூட்டத்தில் 22,40,265 பொதுமக்கள் பங்கேற்ற நிலையில், 97,556 அதிகாரிகள் கலந்து கொண்டனர். மொத்தமாக 2,42,122 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கிராம சபையில் நடைபெற்ற அனைத்து செயல்பாடுகளும் நம்ம கிராம சபை என்ற செயலி மூலம் உடனடியாக பெறப்பட்டு உள்ளது.
ஊராட்சியின் வரவு செலவு கணக்குகள் வெளிப்படை தன்மையுடன் காண்பிக்கப்பட வேண்டும் எனவும், நடைபெற்று வரும் பணிகள் குறித்த புகைப்படங்கள் இடம் பெற்று இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டிருந்தன. கிராம சபையில், கிராமத்தில் உள்ள மக்கள் தொகையின் அடிப்படையில் போதுமான அளவு பொதுமக்கள் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. முதல் முறையாக நடைபெற்ற கிராம சபையின் அனைத்து தகவல்களும் உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சி துறையால் உடனடியாக பெறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பரந்தூர் விமானநிலையத்திற்கு எதிராக கிராம சபைக்கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றம்!