சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் சுலைமான் என்பவர், கடந்த 15 ஆண்டுகளாக பிஸ்மி பிரியாணி என்ற பெயரில் உணவகம் நடத்தி வருகிறார். அதே பகுதியில் அப்துல் ரஹீம் என்பவரும் ரஹ்மான் பிரியாணி என்ற பெயரில் உணவகம் நடத்தி வருகிறார்.
பிஸ்மி என்ற பெயரால் வந்த சிக்கல்:
அப்துல் ரஹீம் கடந்த மார்ச் மாதம் உணவகத்தை திறந்தபோது ஏற்கெனவே இயங்கி வரும் பிஸ்மி என்ற பெயரிலேயே, தனது உணவகத்தின் பெயரை வைத்ததாகவும், அதனால் சுலைமான் நீதிமன்றத்தை நாடி பிஸ்மி என்ற பெயரை அப்துல் ரஹீம் பயன்படுத்தக்கூடாது என தடை வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
கூட்டாக வந்து மிரட்டிய அப்துல் ரஹீம்:
இதனையடுத்து அப்துல் ரஹீம் பிஸ்மி என்ற பெயரை மாற்றி ரஹ்மான் பிரியாணி என்ற பெயரில், உணவகத்தை நடத்தி வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து சுலைமான் மீது ஆத்திரத்தில் இருந்து வந்த அப்துல் ரஹீம், சுலைமானையும் அவரின் கடை ஊழியர்களையும் தொடர்ந்து மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றிரவு சுலைமானின் கடைக்கு முன் வந்த அப்துல் ரஹீம் மற்றும் அவரின் கூட்டாளிகளான அமீர் மற்றும் ஜாஹீர் ஆகிய மூன்று பேரும் கூட்டாக சுலைமான் மற்றும் அவரின் நண்பர் அப்ரோஸ் ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிரியாணிக் கடைத் தொழிலில் போட்டி: இரும்புக் கம்பியால் தாக்கிய இருவர் கைது சாட்சியான சிசிடிவி கேமரா:
வாக்குவாதம் முற்றிய நிலையில் அப்துல் ரஹீமின் கூட்டாளியான அமீர், தனது காரில் மறைத்து வைத்திருந்த பெரிய இரும்புக் கம்பியை எடுத்து வந்து சுலைமான் மற்றும் அவரின் நண்பர் அப்ரோஸ் ஆகியோரைத் துரத்தி துரத்தி கடுமையாகத் தாக்கியுள்ளார். மேலும், அப்ரோஸ் என்பவரின் விலை உயர்ந்த சொகுசுக் காரையும் அமீர் அடித்து நொறுக்கிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இந்தச் சம்பவம் அனைத்தும் சுலைமானின் உணவகம் முன்பு இருந்த சி.சி.டி.வி கேமராக்களில் பதிவாகியுள்ளது.
இதனைத்தொடர்ந்து அப்ரோஸ் சி.சி.டி.வி ஆதாரங்களுடன் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் தாக்குதல் சம்பவம் தொடர்பாக அப்துல் ரஹீம் மற்றும் அமீர் ஆகியோர் மீது புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த நுங்கம்பாக்கம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு சுலைமான் மற்றும் அவரது நண்பர் அப்ரோஸ் மீது தாக்குதலில் ஈடுபட்ட அப்துல் ரஹீம் மற்றும் அமீர் ஆகியோரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:ஆதரவற்றோருக்கு உணவு பொட்டலங்கள் வழங்கிய அரசியல் பிரமுகர்