ஆவடியை அடுத்த அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் தினேஷ் (33). இவர், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், கடந்த 21ஆம் தேதி தினேஷ், தனது காரை வீட்டு முன்பு நிறுத்தி வைத்திருந்தார். அப்போது, அங்கு திடீரென்று 2 இளைஞர்கள் வந்து உள்ளனர். பின்னர், அவர்கள் காரின் பின்பக்க கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
இதனைப் பார்த்த தினேஷின் தந்தை கிருஷ்ணமூர்த்தி தட்டிக் கேட்டுள்ளார். அப்போது, அவர்கள் இருவரும் அவரை கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர். இது குறித்து திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் தினேஷ் புகார் அளித்தார்.
இதனையடுத்து இன்ஸ்பெக்டர் விஜயராகவன் தலைமையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பின்பு அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா உதவியுடன் இளைஞர்களை தேடி வந்தனர்.
இதில், கார் கண்ணாடியை உடைத்தது, அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த கல்லூரி மாணவன் சந்தோஷ் (21), அயப்பாக்கம், தேவி நகரைச் சார்ந்த கிருஷ்ணகுமார் (21) ஆகியோர் எனத் தெரியவந்தது.