12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதம் இரண்டாம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில், பொதுத்தேர்வு மற்றும் 11ஆம் வகுப்பு அரியர் தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் 16 ஆம் தேதி வெளியிடப்பட்டன.
அதனைத் தொடர்ந்து மாணவர்கள் உயர் கல்வி பெறுவதற்காக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டன. தற்போது மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் பள்ளிகளில் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழும், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 600 மதிப்பெண்கள் வீதம் அச்சிடப்பட்ட தனித்தனி மதிப்பெண் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
மாணவர்கள், அவர்கள் படித்த பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள், தேர்வு எழுதிய பள்ளிகளிலும் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்.
அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்களை தலைமை ஆசிரியை சரஸ்வதி வழங்கினார்.
மாணவிகளுக்கு கரோனா சோதனை செய்யப்பட்டு, கைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பின்னர் பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டனர். அனைத்து மாணவர்களும் முகக்கவசம் அணிந்திருந்தனர்.
12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வழங்கல்! மாணவர்கள் அதிகளவில் வருவதை தவிர்க்கும் வகையில், ஒரு மணி நேரத்திற்கு 20 மாணவர்கள் மட்டுமே வரவழைக்கப்பட்டனர்.
மேலும், தகுந்த இடைவெளியை பின்பற்றி மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற சுமார் ஏழு லட்சத்து 50 ஆயிரம் மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பள்ளிக் குழந்தைகளிடம் ஆபாசமாக உரையாடிய மத போதகர்கள் மீது வழக்குப்பதிவு!