நெடுங்குழைகாதர் கோயிலின் தேரோட்டம் நடத்த நீதிமன்றம் உத்தரவு! - Madras HighCourt
சென்னை: தூத்துக்குடி மகர நெடுங்குழைகாதர் கோயிலின் தேரோட்டத்தை கரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றி, காவல்துறை பாதுகாப்புடன் ஜூன் 5ஆம் தேதி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
![நெடுங்குழைகாதர் கோயிலின் தேரோட்டம் நடத்த நீதிமன்றம் உத்தரவு! நீதிமன்றம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11250575-thumbnail-3x2-court.jpg)
தூத்துக்குடி மாவட்டம் தென் திருப்பேரையில் உள்ள அருள்மிகு மகர நெடுங்குழைகாதர் திருக்கோயில், 108 திவ்ய தேசங்களில் 53வது தலமாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் கொடியேற்றத்துடன் தேர்த் திருவிழா தொடங்கி தேரோட்டம் நடத்தப்படுவது வழக்கமாக உள்ளது.
அதேபோல இந்த ஆண்டு தேர்த் திருவிழாவும் திருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெற்ற நிலையில், ஏப்ரல் 5ஆம் தேதி தேரோட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், பாதுகாப்பு வழங்குவது கடினம் என்பதால் தேரோட்டம் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகத்தினர் அறிவிப்பு வெளியிட்டது.
ஒவ்வொரு ஆண்டும் தேரோட்டம் நடத்தப்படும் நிலையில் தேர்தலைக் காரணம் காட்டி இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சேலத்தைச் சேர்ந்த ஏ.ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில், தேர்த்திருவிழாவை முழுமையாக நடத்த வேண்டுமென மார்ச் 3ஆம் தேதி அறநிலையத் துறைக்கு கடிதம் அனுப்பியதாகவும், காவல்துறை பாதுகாப்பு வழங்க முடியாது என்ற காரணத்தை ஏற்க முடியாது என்றும், இது பக்தர்களின் வழிபாட்டு உரிமையைப் பாதிக்கும் வகையில் இருப்பதாகவும் வாதிடப்பட்டது.
அரசு தரப்பில் தேர்தல் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளதால் பாதுகாப்பு வழங்க முன்னர் மறுத்ததாகவும், தற்போது ஒத்துக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களுக்கும் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவில், கரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றியும், தேவையான காவல்துறை பாதுகாப்புடனும் கோயில் தேரோட்டத்தை ஜூன் 5ஆம் தேதி நடத்தும்படி கோயில் நிர்வாகம், காவல்துறை மற்றும் சுகாதாரத் துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.