டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மும்மொழிக் கொள்கையைப் போன்றே புதிய கல்விக் கொள்கையில் மாநிலத்தின் உரிமைகளைப் பறிக்கின்ற அம்சங்களையும் பழனிசாமி அரசு தமிழ்நாட்டில் அனுமதிக்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.
கரோனா பாதிப்பின் வீரியம் குறையாமல் ஊரடங்கு தொடரும் நேரத்தில் அவசரமாக புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது ஏற்புடையதல்ல என்று ஏற்கனவே தெரிவித்திருந்தேன். இது தொடர்பாக மக்களவையில் விரிவான விவாதம் நடத்தி, குறைகளைச் சரிசெய்து, அதன்பிறகே செயல்பாட்டுக்கு கொண்டு வருவதே சரியாக இருக்கும்.
அப்படி வரும்போது குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு வரை தாய்மொழிக்கல்வி கட்டாயம் என்பதை 8ஆம் வகுப்பு வரை தாய்மொழிக்கல்விதான் என்று அறிவிக்க வேண்டும். தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில் முதன்மை மொழியாக தமிழும், உலக அளவிலான பயன்பாட்டிற்கு ஆங்கிலமும் கொண்ட இருமொழிக் கொள்கையே ஏற்றதாக இருக்கும்.
மூன்றாவது மொழியைப் படிப்பது என்பதையே விரும்பினால் மட்டுமே (Optional) என்றிருக்க வேண்டும். அப்படி மூன்றாவதாக ஒரு மொழியைப் படிக்க விரும்பினால் அது மாணவர்கள் விரும்பும் மொழியாகவே இருக்க வேண்டும். ஆனால் "அந்த மூன்றாவது மொழி என்பது எந்தக் காலத்திலும் இந்தி அல்லது சமஸ்கிருதம் ஆக இருக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்த மாட்டோம்" எனும் உறுதிமொழியைத் தெளிவாகவும் வெளிப்படையாகவும் மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.
எந்த ஒரு மொழியும் நமக்கு எதிரானது அல்ல. அதே நேரத்தில், நம்முடைய தாய்மொழியை அழுத்திவிட்டு எந்த மொழியை உயர்த்திப் பிடித்தாலும் அதனை ஏற்க முடியாது, கண்டிப்பாக எதிர்ப்போம். எனவே பேச்சு வழக்கில் இல்லாத சமஸ்கிருதம் போன்ற மொழிகளை வலிந்து நடைமுறைக்கு கொண்டுவரும் முயற்சிக்குப் பதிலாக, தாய்மொழிகளை உயர்த்திப்பிடிப்பதே வளர்ச்சிக்கான பாதையாக இருக்கும்.
பாடச்சுமை குறைக்கப்பட்டு மாணவர்கள் சிந்தித்து கற்பதற்கான வாய்ப்புகளைத் தொழில்நுட்ப வசதியுடன் உருவாக்குவது பாராட்டத்தக்கது. ஆனால், போதுமான கழிப்பறைகளோ, வகுப்பறைகளோ இல்லாத பள்ளிக் கூடங்கள் அதிகமிருக்கும் நாட்டில் அதற்கான கட்டமைப்பை உருவாக்குவதே முதல் பணியாக இருக்க வேண்டும்.
கல்விக்கொள்கை தொடர்பான கழகத்தின் பரிந்துரையில் கூறியதைப்போல 3, 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பது மாணவர்களை நிச்சயமாக வதைப்பதாகவே அமையும். பள்ளியில் கற்றல் இடைநிற்றலில் இருந்து வெளியே சென்ற இரண்டு கோடி குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு அழைத்துவருவது 2020 தேசிய கல்விக் கொள்கையின் இலக்கு என்று கூறப்பட்டிருப்பது உண்மையாக இருந்தால், அதனைச் சிதைக்கும் இந்த பொதுத்தேர்வுகளை ரத்துசெய்ய வேண்டும்.
இதைப்போன்றே, பொதுவான படிப்போடு கூடுதல் அறிவாக தொழில் படிப்பும் சேர வேண்டுமே தவிர, பட்டப்படிப்பை முடிக்காமல் மாணவர்களை ஏதாவது ஒரு தொழிலை நோக்கி தள்ளி விடுவதாக இருந்தால், பேரறிஞர் அண்ணா அச்சப்பட்டதைபோல் எதிர்காலத்தில் அது குலக்கல்வியாக மாறுவதற்கான ஆபத்து இருக்கிறது.
எனவே, இதனை செயல்படுத்துவதில் தமிழ்நாடு மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். நாடு முழுமைக்கும் என்.சி.ஆர்.டி மட்டுமே பாடத்திட்டங்களை உருவாக்கும் என்று கூறப்பட்டிருப்பது ஏற்புடையதல்ல. அந்தந்த மாநிலங்களில் தேவைக்கேற்ப பாடத்திட்டங்களை உருவாக்குவதே சரியாக இருக்கும். இதேபோன்று உயர் படிப்புக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு என்பது பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
நீட் தேர்வுக்குப் பிறகு நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி மிகப்பெரிய சந்தையாக உருவெடுத்துள்ள நிலையில், இந்தத்தேர்வும் வைக்கப்பட்டால், பட்டப்படிப்பு என்பது ஏழை, கிராமப்புற மாணவர்களுக்கு எட்டாக்கனியாகி விடும். தேசிய அளவிலான ஆசிரியர் தேர்வு முறையும் எதிர்பார்க்கிற நல்ல விளைவுகளை ஏற்படுத்தாது என்பதையும் ஆட்சியாளர்கள் உணரவேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.