சென்னை:துக்ளக் இதழின் 51ஆவது ஆண்டு விழாவில் அந்த இதழின் தற்போதை பொறுப்பாளர் ஆடிட்டர் குருமூர்த்தி பேசியதற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. அந்த நிகழ்வில் சசிகலா பற்றி அவரது கருத்துக்கு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டரில், ஒரு சிலர் தங்களைத் தாங்களே அதிமேதாவிகளாக, பவித்திரர்களாக பாவித்துக்கொண்டு, பதற்றத்தில் பிதற்றுவதற்கெல்லாம் பதில் சொல்லி நமது நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று நினைத்திருந்தேன். பலரும் நமது கருத்தைச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பதால் எனது கருத்தை இங்கே பதிவிடுகிறேன்.
ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக அரசியல் விமர்சகராக, துக்ளக் இதழின் நிறுவன ஆசிரியராக இருந்த சோ, தனது இறுதி மூச்சு வரை கடுமையான விமர்சனங்களைக் கூட நகைச்சுவை உணர்வோடும், நாகரிக எல்லையைத் தாண்டாமலும் செய்த பெருமைக்குரியவர்.