அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரோனா தடுப்புப்பணியில் ஈடுபட்டிருந்த சென்னை அரசு மருத்துவமனை தலைமைச் செவிலியின் மரணம் குறித்து வெளியாகும் தகவல்களும், அதற்கு அளிக்கப்படும் விளக்கமும் கரோனா நோய்த்தடுப்பில் அரசு நிர்வாகம் எவ்வளவு மோசமாக செயல்படுகிறது என்பதற்குச் சாட்சியாக இருக்கிறது.
திறனற்ற இந்த ஆட்சியாளர்கள் தமிழ்நாட்டை எங்கே கொண்டு நிறுத்தப் போகிறார்களோ என்ற கவலையையும் மக்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையின் தலைமைச் செவிலியாகப் பணியாற்றிவந்த ஜோன் மேரி பிரிசில்லா கரோனா தொற்றால் உயிரிழந்ததாக முதலில் தகவல் வெளியானது. அதன்பிறகு என்ன நடந்ததோ, அவர் கரோனா பாதிப்பால் இறக்கவில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் விளக்கமளித்தது.
பிரிசில்லாவின் மருத்துவ அறிக்கையில், கரோனாவால் அவர் பாதிக்கப்பட்டிருப்பதாக குறிக்கப்பட்டிருந்ததை அவரது சகோதரர் ஊடகங்களிடம் தெரிவித்தார். அதற்கு, ’யாராவது தவறாக எழுதியிருப்பார்கள்’ என்றொரு அலட்சியமான பதிலை மருத்துவமனை நிர்வாகம் அளித்திருக்கிறது.