சென்னை:Jayakumar criticize DMK:சென்னை காசிமேடு மீன்பிடித்துறைமுகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சுனாமி பேரலைத் தாக்கி 17 ஆண்டுகள் ஆன நிலையில் சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு மலர்த் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி, கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினார். அப்போது நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது,
'மீனவர்கள் நலனில் அக்கறை கொண்டது அதிமுக அரசு. அதனால்தான் சுனாமிக்குப் பிறகு மீனவர்களுக்குப் பல இடங்களில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. வட சென்னையில் பல இடங்களில் சுனாமி குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
சுனாமி பாதிப்பிற்குப் பிறகு மீனவ மக்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தி தந்தது, அதிமுக அரசுதான். மீனவர்களுக்கும், தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் எந்த ஒரு நிவாரணமும் வழங்காதது, திமுக அரசு.
'ராஜேந்திரபாலாஜி விவகாரத்தில் திமுக அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளது'
ராஜேந்திரபாலாஜி பொருளாதார ரீதியில் குற்றம்சாட்டப்பட்டவர். அவரை ஒரு தேசத்துரோகி போல அறிக்கை அளித்து, வங்கிக் கணக்குகளை முடக்குதல் போன்ற செயல்களை திமுக செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள எத்தனை குற்றவாளிகளுக்கு இதுபோன்ற அறிக்கைகளும் அவர்களுடைய வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. ராஜேந்திரபாலாஜியை வைத்து அதிமுகவை குற்றம்சாட்டும் செயலில் திமுக ஈடுபட்டு வருகிறது.
கடலூரில் கொலைக்குற்றவாளியான எம்.பி.,க்கு ஏன் இதுபோன்ற நோட்டீஸோ, வங்கிக் கணக்கு முடக்கமோ செய்யவில்லை. ஆளுங்கட்சி என்றால் ஒரு விசாரணை, எதிர்க்கட்சி என்றால் ஒரு விசாரணை என்ற முறையில் திமுக அரசு செயல்பட்டு வருகிறது.
இன்னும் சில நாட்கள் கடந்தால் மத்திய அரசிடம் கேட்டு ராஜேந்திரபாலாஜியைப் பிடிக்க ராணுவத்தை அழைத்துள்ளோம் என திமுக கூறும் நிலையும் ஏற்படும்.
ராஜேந்திரபாலாஜி குற்றவாளி அல்ல. அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சட்டரீதியாக அவருக்கு முன் ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க காலதாமதம் கொடுக்காமல் அதிமுகவை திமுக குற்றம்சாட்டி வருகிறது.