தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'அந்தப் பயம் இருக்கட்டும்'- விஜய் டயலாக்கை கையிலெடுத்த ஜோதிமணி! - காங்கிரஸ் கட்சியின் அரசியல் வியூகம்

பாஜகவுக்கு எதிராக திமுக தேர்தல் பாணியை, இந்திய அளவில் பின்பற்றும் காங்கிரஸ் கட்சியின் அரசியல் வியூகமாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

எம்பி ஜோதிமணி
எம்பி ஜோதிமணி

By

Published : Jan 8, 2022, 6:26 AM IST

கடந்த இரண்டு நாள்களாக சமூக வலைத்தளங்களில் மிகவும் பகிரப்படும் கருத்துகளில் பிரதமர் மோடி, பஞ்சாப் மாநிலத்திற்குச் சென்று திரும்பியது பற்றிய பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. இதனிடையே தமிழ்நாட்டில் 'தமிழர் திருநாள், பொங்கல் பண்டிகை' கொண்டாடுவதற்குப் பிரதமர் மோடி வருகை தருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், திடீரென பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கரூர் மக்களவை உறுப்பினரும் காங்கிரஸ் கட்சி பிரமுகருமான ஜோதிமணி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “வந்தபின் எதிர்த்து நின்று போக வைப்பது ஒரு விதம்; வராமலே தடுத்து நிறுத்துவது இன்னொரு விதம். இதில் தமிழ்நாடு இரண்டாவது பெருமையைத் தட்டிச் செல்கிறது. அந்த பயம் இருக்கட்டும்“ என நடிகர் விஜய் சினிமாவில் பேசிய பிரபலமான மாஸ் டயலாக்கை இணைத்துப் பதிவிட்டுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி பேட்டியில் கருத்து

காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போது, இந்தியாவிலுள்ள விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக இரண்டு வருடங்கள் போராடினார்கள். 20 நிமிடம் பிரதமர் காத்திருந்ததற்காக பாஜகவினரின் கொந்தளிப்பில் என்ன நியாயம் இருக்கிறது என்று பேசியிருந்தார்.

2 நாள்களுக்கு முந்தைய ட்விட்டர் பதிவு - உயிர் இழப்புகளை மறக்காத விவசாயிகள்

ஜனவரி 5ஆம் தேதியன்று, 'பஞ்சாப் விவசாயிகளின் எதிர்ப்பால் பிரதமர் மோடி திரும்பிச் சென்றது; விவசாயிகள் போராட்டத்தில் 700 விவசாயிகள் உயிர்நீத்தது. மத்திய அமைச்சரின் மகன் டிராக்டர் ஏற்றி விவசாயிகள் போராட்டத்தில் உயிர் இழப்பை ஏற்படுத்தியது போன்ற சம்பவங்களை விவசாயிகள் இன்னும் மறக்கவில்லை என்பதை நினைவூட்டுகிறது' என்று பதிவிட்டிருந்தார்.

ஜோதிமணி ட்வீட்

இன்றைய ட்விட்டர் பதிவு - இட ஒதுக்கீட்டுக்கு வரவேற்பு

ஜனவரி 7ஆம் தேதியான இன்று, அகில இந்திய ஒதுக்கீட்டில் PG மருத்துவ மாணவர்களுக்கு 27 சதவீத OBC இட ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்புக்கு தனது வரவேற்பைத் தெரிவித்துள்ளார். மேலும், மோடி அரசின் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டிற்கு முடிவு கட்டப்பட்டிருக்கிறது என்றும் பதிவிட்டுள்ளார்.

விஜய் டயலாக் பாணியில் ட்வீட்

இதன் மூலம், கடந்த இரண்டு நாள்களாக கரூர் எம்பி ஜோதிமணியின் அடுத்தடுத்த ட்விட்டர் பதிவுகள், பாஜகவுக்கு எதிரான கருத்துக்களாக சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய பேசுப்பொருளாக மாறியுள்ளது.

அமைச்சர் செந்தில்பாலாஜியின் ட்விட்டர் - முதலமைச்சருக்கு வெற்றி

இதேபோல, கரூர் சட்டப்பேரவை உறுப்பினரும் தமிழ்நாடு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சருமான செந்தில்பாலாஜி தனது ட்விட்டர் பதிவில், பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு தமிழ்நாடு முதலமைச்சருக்குக் கிடைத்துள்ள வெற்றி எனப் பதிவிட்டுள்ளார்.

செந்தில் பாலாஜி ட்வீட்

தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தலின்போது தமிழ்நாட்டில், கோபேக் மோடி (Go Back Modi) என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்த திமுக பாணியில், பஞ்சாப் சம்பவம், தமிழ்நாட்டில் பிரதமர் மோடி நிகழ்ச்சி ரத்து எனக் காங்கிரஸ் கட்சியும் பிரதமர் மோடிக்கு எதிராக திமுக கொண்ட அதே பாணியைப் பின்பற்றத் தொடங்கியுள்ளது.

இதனால் பாஜகவுக்கு எதிராக சமூகவலைத்தளங்களில் பரவிவரும் ட்ரெண்டிங் கருத்துக்கள் இந்திய அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. தமிழ்நாட்டின் திமுக பாணியை, பஞ்சாப் - தமிழ்நாடு மாநிலங்களில் பிரதமர் மோடி நிகழ்ச்சி ரத்தானது குறித்து காங்கிரஸ் கட்சியும் கையிலெடுத்துள்ளது. திமுகவினரும் தற்போது பாஜகவுக்கு எதிராக சமூகவலைத்தளங்களில் தெரிவிக்கும் கருத்துகள் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.

ABOUT THE AUTHOR

...view details