தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'நட்புக்கு இலக்கணம் பேராசிரியர்' - அன்பழகன் மரணம்

பேராசிரியர் க. அன்பழகன் இன்று காலமாகியுள்ள நிலையில், கருணாநிதிக்கும் அன்பழகனுக்குமான நட்பை விளக்கும் வகையிலான காணொலி ஒன்றை டி.ஆர்.பி. ராஜா பகிர்ந்துள்ளார்.

TRB Raja tweet about Anbazhagan karunanidhi friendship
TRB Raja tweet about Anbazhagan karunanidhi friendship

By

Published : Mar 7, 2020, 3:32 PM IST

Updated : Mar 7, 2020, 5:53 PM IST

திமுக பொதுச்செயலாளரும் தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் ஆளுமைகளில் ஒருவருமான க. அன்பழகன் இன்று காலை ஒரு மணியளவில் வயது மூப்பின் காரணமாக காலமானார். அவரது உடல் கீழ்ப்பாக்கத்திலுள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

திமுக தலைவராக இருந்த கருணாநிதிக்கும் அன்பழகனுக்குமான நட்பு என்பது நீண்ட நெடியது. மகிழ்ச்சியான சூழ்நிலையில் மட்டுமல்ல கடினமான பல சூழ்நிலைகளிலும்கூட கருணாநிதிக்கு பக்கபலமாகத் தோழனுக்குத் தோழனாக இருந்தவர் அன்பழகன்.

திமுகவிலிருந்து எம்ஜிஆர் பிரிந்து சென்று தனிக்கட்சி ஆரம்பித்தபோது, அவசரநிலை பிரகடனத்தின்போது கருணாநிதிக்கு அன்பழகன் அளித்த மன ரீதியான உறுதியும் நம்பிக்கையும் என்பது சமகால அரசியல் தலைவர்களுக்கும் சரி, அரசியல் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கும் சரி, பெரும் பாடம்.

அதன் விளைவாகவே கருணாநிதியை சமகால கோப்பெருஞ்சோழனாகவும், அன்பழகனை பிசிராந்தையாராகவும் திமுகவினர் கொண்டாடி மகிழ்கின்றனர். அரசியலில் வட இந்திய கட்சிகள் முதல் திராவிட மண் சார்ந்த மாநிலங்களில் ஒன்றாக விளங்கும் ஆந்திரா வரை தந்தை - மகன், மாமனார் - மருமகன் என அரசியல் துரோகங்களுக்கு வரையறையே இருந்ததில்லை. அகிலேஷ் யாதவ், சந்திரபாபு நாயுடு, அஜித் பவார் என அந்த வரிசை நீளும்.

இருப்பினும், நண்பன் கருணாநிதியைவிட வயதில் மூத்தவராக இருந்தாலும், பதவி ஆசைகளைத் துறந்து இறுதிவரை நல்ல நண்பனாகவே வாழ்ந்து மறைந்த பேராசிரியர் அன்பழகனின் வாழ்க்கை என்பது கொண்டாடப்படவேண்டியது.

இந்நிலையில் அவர்கள் இருவருக்குமான நட்பை விளக்கும் வகையிலான காணொலி ஒன்றை மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

2ஜி வழக்கில் கனிமொழி, ஆ. ராசா ஆகியோர் விடுவிக்கப்பட்டதையடுத்து, கனிமொழி உள்ளிட்ட திமுகவினர் கருணாநிதியை காண்பதற்கு சென்றிருந்தனர். அப்போதே கருணாநிதியின் உடல்நிலை மோசமாகியிருந்தது. அந்தச் சூழலிலும்கூட கனிமொழியிடம், 'பேராசிரியர் எங்கே?' என்று கேட்கிறார். அப்படிப்பட்ட ஒரு நட்பு அவர்களுக்கானது.

இந்தக் காணொலியைத்தான் டி.ஆர்.பி. ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "நட்புக்கு இலக்கணம், ஸ்டாலினின் பெரியப்பா, கழக இளைஞர்களின் கட்டுப்பாடு மிக்க தாத்தா ... தமிழினத்தின் மான மறவர்களின் மூத்தவராக இருந்த இனமான #பேராசிரியர் நம்மைவிட்டு பிரிந்துவிட்டார் ! அவர் கட்டிக்காத்த சுயமரியாதைச் சுடர் என்றும் பிரகாசமாக ஒளிரச் செய்வது நமது கடமை #Perasiriyar" என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ‘இனமான இமயம் உடைந்துவிட்டது!’ - பேராசிரியருக்கு ஸ்டாலின் கண்ணீர் கவிதை

Last Updated : Mar 7, 2020, 5:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details