சென்னை: முதுகலை கணினி ஆசிரியர்களின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. 2018-19 கல்வியாண்டில் முதுகலை கணினி ஆசிரியர் பணியிடத்தில் 814 நபர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு, 2019ஆம் ஆண்டு மார்ச் ஒன்றாம் தேதி வெளியிடப்பட்டது.
இவர்களுக்கு இணையம் மூலம் எழுத்துத்தேர்வு ஜூன் மாதம் 23, 27 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் 2019 நவம்பர் 25ஆம் தேதி வெளியிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 2020 ஜனவரியில் நடத்தப்பட்டது. அதனடிப்படையில் வெளியிடப்பட்ட தேர்வு முடிவினை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த வழக்கில் 116 மையங்களில் தேர்வு எழுதியவர்களின் தேர்வு முடிவுகளை வெளியிடலாம் எனவும், நாமக்கல், கும்பகோணம், திருச்சி ஆகிய நகரங்களில் நடைபெற்ற மூன்று தேர்வு மையங்களில் தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது எனவும் நீதிமன்ற உத்தரவு வெளியாகியிருந்தது.
இச்சூழலில், ஆசிரியர் தேர்வு வாரியம் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 742 நபர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. நிரப்பப்படாமல் மீதமுள்ள இடங்களுக்கு, நீதிபதி ஆதிநாதன் விசாரணை முடிந்த பின்னர், அவரளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் தேர்வுப் பட்டியலை வெளியிடுவது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்யும் எனத் தெரிகிறது.