சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களுக்கான பலன்களை உடனடியாக வழங்கக்கோரி தமிழ்நாடு முழுவதிலுமுள்ள போக்குவரத்து கழக தொழிலாளர்கள் இன்று (ஜன.7) காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக ஜன., 5ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு 14ஆவது ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்துவது தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை, சென்னை குரோம்பேட்டையில் உள்ள போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில், துறைச் செயலாளர் சமயமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்த பேச்சு வார்த்தையில் எந்த வித முடிவும் எட்டப்படவில்லை.
இந்நிலையில், இன்று (ஜன.7) போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு பதவி உயர்வு, ஓய்வூதிய பணப்பலன்கள் ஆகியவற்றை வழங்குவதற்கான ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் உள்ள போக்குவரத்து கழக தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.