திருவள்ளூர்:பூவிருந்தவல்லி அண்ணம்பெடு ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக கடந்த 2010ஆம் ஆண்டு பணி நியமனம் செய்யப்பட்ட சந்தன்ராஜ் என்பவர் நிர்வாக காரணத்தால் பணி மாறுதலில் கொசவம்பாளையம் ஊராட்சியில் 2015ஆம் ஆண்டு ஊராட்சி செயலாளர் பணியில் சேர்ந்து பணி புரிந்து வந்தார்.
இந்த நிலையில் 2015ஆம் ஆண்டு முதல் அவர்பணிக்கு செல்லாமல் கடந்த 2020ஆம் ஆண்டு ஊராட்சி செயலாளர் பணியிடம் கோரி விண்ணப்பித்தார். அந்த விண்ணப்பத்தில் ஆணாக இருந்து திருநங்கையாக மாறும் உணர்வுகளால் ஏற்பட்ட மன தடுமாற்றத்தால் பணிக்கு வர முடியாத நிலை ஏற்பட்டது.
பணியமர்த்த கோரிக்கை: இந்த நிலையை கருத்தில் கொண்டு, தற்போது முழுமையாக திருநங்கையாக மாறி உள்ளதால் திருநங்கை என்ற அடிப்படையில் மனிதாபிமான முறையில் ஊராட்சி செயலாளராக மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தார்.
தமிழ்நாட்டில் அரசு பணியில் திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க கோரிக்கை இதனை ஏற்று பூவிருந்தவல்லி ஒன்றியம் கொசவம்பாளையம் ஊராட்சியில் செயலாளராக பணிபுரிந்த சந்தன்ராஜ் என்கிற தாட்சாயணியை, தற்பொழுது எல்லாபுரம் ஒன்றியம் கோடுவெளி ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக பணியமர்த்தப்பட்டதற்கான ஆணையை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் வழங்கினார்.
அரசு பணிகளில் இட ஒதுக்கீடு: பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருநங்கை தாட்சாயணி கூறும்போது, 'தற்பொழுது திருநங்கையான தனக்கு தமிழகத்திலேயே முதல் முறையாக ஊரக வளர்ச்சித்துறையில் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு உறுதுணையாக இருந்த பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர், பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி, கோடுவெளி ஊராட்சி மன்ற தலைவர் சித்ராரமேஷ் உள்ளிட்டோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார்.
மேலும், திருநங்கைகளுக்கு அரசு பணிகளில் இட ஒதுக்கீடு வழங்கி திருநங்கைகளின் திறமைக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும்' என தமிழ்நாடு அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: திருநங்கைகளின் திறமைகளை வெளிக்கொண்டுவர அரசு முன்வர வேண்டும்: திருநங்கை கல்கி சுப்பிரமணியம்