'அம்மா'... தமிழ் மரபில் மிகவும் சக்திவாய்ந்த ஒரு சொல். தாயுமானவர்கள் நிறைந்த இம்மண்ணில் அச்சொல் வெறுமனே பெண்ணை மட்டுமே குறிக்கும் என்று கடந்துவிட முடியாது. எவ்வித எதிர்பார்ப்புமற்ற அன்பைப் பொழிபவர் அம்மா என்ற சொல்லில் அடக்கிவிடலாம். அப்படி ஒருவர்தான் திருநங்கை நூரி சலீம்.
குடும்பம், நண்பர்கள் என அனைவராலும் ஒதுக்கப்பட்ட திருநங்கை நூரி சலீமுக்கு தற்போது வயது 69. உலக நாடுகளுக்கு ஹெச்.ஐ.வி. எய்ட்ஸ் நோய் பற்றி தெரியவந்த 1987இல், இந்தியாவில் அதனால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நபர் என அறியப்பட்டவர். தற்போது ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டுள்ள 45 ஆதரவற்ற குழந்தைகளுக்கு அரணாகவும், அன்னையாகவும் இருக்கிறார் நூரி.
திருநங்கை நூரி 2003ஆம் ஆண்டு முதல் நிர்வகித்துவரும் SIP நினைவு இல்லம் மூலம், நோய் பாதித்த பல குழந்தைகள் பள்ளி, கல்லூரிகள் எனப் படித்து, தடைகளைத் தாண்டி வெற்றி பெற்றுவருகின்றனர். மேலும், இங்குள்ளவர்கள் தவிர, 100-க்கும் அதிகமான வெளிக் குழந்தைகளுக்கும் கல்வி உள்ளிட்டவற்றிற்கு உதவிவருகிறார் நூரி சலீம்.