சென்னை:தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட 200 வார்டுகளுக்கு நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 2022யை முன்னிட்டு, தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மத்திய, மாநில அரசுத் துறைகள், பொதுத் துறை நிறுவனங்களைச் சார்ந்த 27 ஆயிரத்து 812 பணியாளர்களுக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு, அனைத்து அலுவலர்கள், பணியாளர்களுக்கும் நேற்று (ஜனவரி 30) குறுஞ்செய்தியும் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள அலுவலர்கள், பணியாளர்களுக்கான பணி நியமன ஆணையில் குறிப்பிட்டுள்ளவாறு, ஒதுக்கப்பட்டுள்ள பயிற்சி வகுப்புகளில் முதற்கட்ட பயிற்சி வகுப்பு 24 மையங்களில் இன்று (ஜனவரி 31) தொடங்கியது.
தேர்தல் பணிகளில் ஈடுபடும் அலுவலர்கள், பணியாளர்களில் இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திய பிறகு ஒன்பது மாதங்கள் (39 வாரங்கள்) கடந்தவர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியும் (Precautionary Booster Dose) செலுத்துவதற்காகச் சிறப்பு முகாம் அனைத்து மையங்களிலும் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் இன்று மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் குறித்தும், அஞ்சல் வாக்கு குறித்தும் இன்று விரிவாக பயிற்சி அளிக்கப்படுகிறது. வருகின்ற அலுவலர்கள் கரோனா விதிமுறைகளைப் பின்பற்ற ஏதுவாக தகுந்த இடைவெளி விட்டு அமர்ந்து பயிற்சி பெற்றுவருகின்றனர். இரண்டாம் கட்ட பயிற்சி பிப்ரவரி 10ஆம் தேதி நடைபெறும்.
இதையும் படிங்க:தை அமாவாசை- ஸ்ரீரங்கத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்