தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்காவிட்டால் பாரம்பரியக் கலைகள் அழிந்துவிடும்' - நீதிமன்றம் வேதனை - பாரம்பரிய இசைக் கலைஞர்கள்

சென்னை: நடைமுறைச் சிக்கல்களைக் காரணம் காட்டி நாதஸ்வரம், தவில் உள்ளிட்ட பாரம்பரிய இசைக் கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்காவிட்டால் பாரம்பரியக் கலைகள் அழிந்துவிடும் என உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

musicians
musicians

By

Published : Jul 21, 2020, 4:01 PM IST

ஊரடங்கின் காரணமாக நலவாரியத்தில் பதிவு பெறாதவர்களுக்கும், உறுப்பினர் அட்டையைப் புதுப்பிக்க தவறியவர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என கட்டுமான தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த முறை விசாரணைக்குவந்தபோது, அரசு மனிதநேய அடிப்படையில் குறைந்தபட்ச நிவாரணமாக ஆயிரம் ரூபாய் மற்றும் ரேஷன் பொருள்கள் வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், நலவாரியத்தில் புதுப்பிக்க தவறியவர்கள், உறுப்பினர்களாக இல்லாதவர்கள் ஆகியோருக்கு நிவாரணம் வழங்குவதற்கான வாய்ப்பு இல்லை என அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கோயில்கள் மூடப்பட்டுள்ளதாலும், திருமண நிகழ்வுகள் நடைபெறாத காரணத்தினாலும் நாதஸ்வர, தவில் வித்வான்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி நிலுவையில் உள்ள வேறொரு வழக்கைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ஏற்கனவே நலிந்த கலைஞர்களாகக் கருதப்படும் இவர்கள், இந்தப் பேரிடர் காலத்தில் மிகப்பெரிய பொருளாதாரப் பிரச்னைகளைச் சந்தித்துவருவதாகக் கருத்து தெரிவித்தனர்.

மேலும், நடைமுறைச் சிக்கல்களை மட்டுமே காரணம் காட்டி இதுபோன்ற நலிந்த கலைஞர்களான நாதஸ்வரம், தவில் உள்ளிட்ட பாரம்பரிய இசைக் கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்காவிட்டால், தமிழ்நாட்டில் இருக்கும் பாரம்பரியக் கலைகள் அழிந்துவிடும் என வேதனை தெரிவித்தனர். பின்னர், அரசுத் தலைமை வழக்கறிஞரின் வாதத்திற்காக விசாரணையை ஜூலை 28ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: 'தமிழி' எழுத்து வரலாற்றில் முக்கியத் திருப்புமுனை; 'மா' மதுரையில் கண்டெடுக்கப்பட்ட அரிய பொக்கிஷம்!

ABOUT THE AUTHOR

...view details