தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாடு மின்வாரிய தனியார்மயத்திற்கு கடிவாளமிட்ட தொழிற்சங்கங்கள்! - மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்

மத்திய அரசின் மின்சார சட்டதிருத்த மசோதா 2020ஐ கொள்கை அளவில் தமிழ்நாடு அரசு எதிர்த்தாலும், கொள்ளைப்புறம் வழியாக மின்வாரியத்தை தனியார்மயப்படுத்தும் அரசின் முயற்சிக்கு தங்களின் போராட்டங்கள் மூலம் தொழிற்சங்கங்கள் கடிவாளமிட்டுள்ளன.

தமிழ்நாடு மின்சார வாரியம்
தமிழ்நாடு மின்சார வாரியம்

By

Published : Dec 22, 2020, 11:40 PM IST

Updated : Dec 24, 2020, 6:58 PM IST

சென்னை: தமிழ்நாடு மின்வாரியத்தில் முதல் முறையாக புகுத்தப்பட்ட தனியார்மயமாக்கல் நடவடிக்கைகள் தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளன. மின்வாரியத்தின் முக்கியமான பிரிவுகளான உற்பத்தி, விநியோகம் ஆகியவற்றில் தனியார்மயமாக்கல் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்த சூழலில், அது குறித்த செய்திகளை தொடர்ந்து ஈ.டிவி பாரத் ஆதாரங்களுடன் வெளியிட்டு வந்தது.

தமிழ்நாடு மின்வாரியம் தனியார்மயமாகாது என்று மின்சாரத்துறை அமைச்சர் கூறி வந்த நிலையில், வாரியத்தின் பல பிரிவுகளில், தொடர்ந்து தனியார்மயமாக்கல் செயல்படுத்தப்பட்டது. அரசின் இந்த நடவடிக்கைகள் ஊழியர்களின் போராட்டத்தின் விளைவாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. தனியார் நிறுவனங்களுக்கு தாரைவார்த்து அளிக்கப்பட்ட உத்தரவுகள் ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் தங்கமணி அறிவித்தார்.

அவுட்சேர்சிங் முறையில், தனியார் நிறுவனத்தின் மூலம், வையர் மேன், ஹெல்பர் பணியிடங்களுக்கு, வாரிய உத்தரவு 82ன் மூலம் வெளியிட்ட உத்தரவை ரத்து செய்வதாக செய்தியாளர்கள் சந்திப்பில், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி முதலில் அறிவித்தார்.

பின்னர், ஊழியர்களின் தொடர் போராட்டம் காரணமாக, மின்சார வாரியத்தின் இயக்குநர் (இயக்குதல் பிரிவு) சண்முகம், 5 துணை மின்நிலையங்களை தனியார் நிறுவனத்தின் மூலம் பராமரிப்பதற்கான உத்தரவினை ரத்து செய்து அறிவித்தார்.

திடீர் போராட்டமும் அமைச்சர் வருகையும்

டிச., 21ஆம் தேதி காலை 10 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் திடீரென மின்சார வாரிய பணியாளர்கள், அலுவலகத்தின் வாயில்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலைமையை சமாளிக்க காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்திற்கு அமைச்சர் தங்கமணி, மதியம் 12.15 மணிக்கு வந்தார். தொழிலாளர்கள் அவரின் காரை மறித்து போரட்டம் நடத்தினர்.

காவலத்துறையினர் அமைச்சரை பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். போராட்டம் நடத்திய தொழிற்சங்க நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர்; நிர்வாகிகள் அதனை புறக்கணித்தனர். இதனைத் தொடர்ந்து அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களிடம், 'தனியார் நிறுவனத்தின் மூலம் பணியாளர்கள் நியமனம் செய்ய வாரியம் போட்ட உத்தரவு ரத்துச் செய்யப்படுகிறது' என அறிவித்தார்.

ஆனாலும், ரத்துச் செய்யப்பட்டதற்கான உத்தரவை அளிக்க வேண்டும் என தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இதன் விளைவாக அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டது. அவுட்சேர்சிங் முறையை ரத்து செய்தும், துணை மின்நிலையங்களை தனியார் நிறுவனத்தின் மூலம் பராமரிக்கும் பணியும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தொழிற்சங்கத்தினர் பட்டாசு வெடித்து தங்களின் வெற்றியை கொண்டாடினர்.

மின்வாரிய தனியார்மயத்திற்கு கடிவாளமிட்ட தொழிற்சங்கங்கள்

கொல்லைப்புற வழியாக வந்த தனியார்மயம்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் புதிதாக அமைக்கப்பட்ட 3 துணை மின் நிலையங்களை தனியார் நிறுவனங்களின் மூலம் பராமரிக்க வாரியத் தலைவரின் உத்தரவின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. இந்த செய்தியை அக்.,7ஆம் தேதி முதல் முதலாக ஈ.டிவி பாரத் வெளியிட்டது.

விழுப்புரம் மின்பகிர்மான கோட்டத்திற்குட்பட்ட சங்கராபுரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 230/110 கிலோ வாட் துணை மின்நிலையத்தின் பராமரிப்பு பணி தனியாரிடம், இரண்டு ஆண்டுகள் குத்தகைக்கு அளிக்கப்பட்டது. இதற்கு கட்டணமாக, 93 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

அதேபோல் மதுரை மாவட்டம் சமயநல்லூரில் புதிதாக அமைக்கப்பட்ட 230/110 கிலோ வாட் துணை மின் நிலையத்தின் பராமரிப்பு பணியும், இரண்டு ஆண்டுகள் குத்தகைக்கு, 93 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் செலவில் ஒப்பந்தம் விடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இவைகளுக்கு எல்லாம் சிகரமாக, சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள 230/33 கிலோ வாட் துணை மின் நிலையத்தின் பராமரிப்புப் பணியை கிண்டியில் உள்ள ஸ்ரீவாரி எலக்ட்ரிக்கல் என்கிற தனியார் நிறுவனத்திற்கு, 2 ஆண்டுகளுக்கு கட்டணமாக 81 லட்சத்து 36 ஆயிரத்து 241 ரூபாய் நிர்ணயம் செய்து நவம்பர் 24ஆம் தேதி அனுமதி வழங்கப்பட்டது. இந்த உத்தரவை ஆதாரத்துடன் செய்தியாக டிச., 18ஆம் தேதி ஈடிவி பாரத் வெளியிட்டது.

ரத்து செய்யப்பட்ட உத்தரவுகள்

அரசின் நிலைப்பாடும் செயல்பாடும்

தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு மின்வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய அரசின், 'மின்சார சட்டத் திருத்த மசோதா 2020'ஐ தமிழ்நாடு அரசு கொள்கை அளவில் எதிர்த்து உள்ள நிலையில், துணை மின் நிலையங்களை குத்தகைக்கு விடுவது மறைமுகமாக தனியார்மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் நடவடிக்கை. இது மாநில அரசின் கொள்கை முடிவுக்கு எதிரானது. எனவே அரசு இந்த முடிவினை கைவிட வேண்டும் என வலியுறுத்தினர்.

இதுகுறித்து தமிழ்நாடு மின்சார ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் ராஜேந்திரன், தலைவர் ஜெயசங்கர் ஆகியோர், "தமிழ்நாட்டில் முதல் கட்டமாக 3 துணை மின் நிலையங்களை தனியாருக்கு இரண்டு ஆண்டுகள் குத்தகைக்கு அளிப்பதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு மின்சார வாரியம் மேற்கொண்டது. இதன் மூலம் மத்திய அரசின் மின்சார திருத்தச் சட்டத்தைத் தமிழ்நாட்டில் மறைமுகமாக அமல்படுத்தும் நடவடிக்கையை தமிழ்நாடு மின்சார வாரியம் தொடங்கியது. இதனால் துணை மின் நிலையங்களில் பதவி உயர்வு பாதிக்கப்படுவதுடன், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பும் பாதிக்கப்படும். 150 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு துணை மின் நிலையத்தைத் இரண்டு ஆண்டுகள் பராமரிப்பதற்கு 99 லட்சம் ரூபாய்க்கு, அரசு தனியாரிடம் குத்தகைக்கு விடுகிறது

தமிழ்நாடு அரசின் அரசாணையின் படி, மின்வாரியத்தில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் தனியார் பணி செய்ய அனுமதிக்கப்படக் கூடாது. அதனையும் மீறி, அரசிற்கு தெரியாமல் தமிழ்நாடு மின்சார வாரிய மேலாண்மை இயக்குநர், இது போன்ற செயல்களை மேற்கொண்டு வருகிறார்.

அதேபோல், 23 துணை மின் நிலையங்களை தனியார் பராமரிப்பதற்கு அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு மின்சார வாரியம் மேற்கொண்டு உள்ளது. இந்த நடவடிக்கைகளை அரசு தடுத்து நிறுத்தாவிட்டால், அனைத்து சங்கங்களையும் அழைத்து போராட்டம் நடத்த போவதாக தெரிவித்திருந்தனர்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தனியார்மயத்தை புகுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்சார வாரிய தொழிற்சங்கங்கள் நவ.,4 ஆம் தேதி தர்ணா போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்த நிலையில், நவம்பர் 3 ஆம் தேதி திருப்பத்தூரில் புதிதாக அமைக்கப்பட்ட 230/110 கிலோ வாட் துணை மின் நிலையத்தை, ஒப்பந்த அடிப்படையில் இரண்டு ஆண்டுகள் பராமரிப்பதற்குத் தனியாரிடம் ஒப்படைக்க தமிழ்நாடு மின்சார வாரியம் ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டிருந்தது.

உயர் மின் கோபுரங்கள் பரமரிப்பில் தனியார்

தமிழ்நாடு மின்வாரியத்தில் தனியார்மயம் புகுத்தப்படாது என மின்சார துறை அமைச்சர் கூறி வந்த நிலையில், தமிழ்நாடு மின்சார தொடரமைப்பு நிறுவனத்தில், உயர் மின்கடத்தி கோபுரங்கள் பராமரிப்பினை தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் விடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் தலைமை செயற்பொறியாளர் இயக்குதலும், பராமரித்தலும் அக்டோபர் 28ஆம் தேதி சென்னை, ஸ்ரீபெரும்புத்தூர், திண்டிவனம், விழுப்பும் ஆகியவற்றின் மேற்பார்வை பொறியாளர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், 110 கி.வா., 230 கி.வா., 400 கி.வா., 765 கி.வா., துணை மின்நிலையங்களுக்கு உயர் அழுத்த மின்சாரம் கடத்திச் செல்லும் உயர்மின் கடத்தி கம்பிகளை தனியார்கள் பராமரிப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

சென்னை புளியந்தோப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையத்தை இரண்டு ஆண்டுகள் பராமரிப்பதற்குத் தனியாருக்கு 202.39 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் டிசம்பர் 1ஆம் தேதி அனுமதி வழங்கியிருந்தது.

பறிபோகும் காலி பணியிடங்கள்

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஹெல்பர், வயர்மேன் பணியிடங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்பதற்கான உத்தரவு டிச.,16ஆம் தேதி வெளியிட்டது.

இது குறித்த செய்தியை முதலில் ஈடிவி பாரத் தான் வெளியிட்டது. தொடர்ந்து இந்த நடவடிக்கையால் ஐடிஐ படித்த மாணவர்களின் வேலை வாய்ப்பும் பறிபோகும் என்பதையும் தெளிவாக விளக்கியது.

துணை மின் நிலைய பராமரிப்பு பணிகளைத் தனியார் மயமாக்குவதை கண்டித்தும், உபகோட்ட பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களில் தனியார் நிறுவனம் மூலம் ஆட்கள் நியமிக்கப்படும் என்ற உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தியும், காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் டிச.,18ஆம் தேதி அறிவித்திருந்தனர்.

ஆனால் போராட்டம் எப்போது நடத்தப்படும் என்பது குறித்து திங்கள் கிழமை அறிவிக்கப்படும் என கூறிய போராட்டக் குழுவினர், திடீர் என மின்வாரிய அலுவலகங்களின் வாயிலை மறித்து டிச.,21ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அலுவலர்கள் திகைத்துப் போயினர். தொழிற்சங்கத்தினரின் இந்த போராட்டம், அவர்களின் முக்கியமான கோரிக்கையான தனியார்மயமாக்கல் நடவடிக்கையை, அரசு திரும்பப் பெற்றது.

இதையும் படிங்க:டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்‍கு ஆசிரியர்கள் ஆதரவு

Last Updated : Dec 24, 2020, 6:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details