சென்னை:தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் வழக்கத்தைவிட காய்கறிகளின் வரத்து குறைவு என்பதால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கோயம்பேடு மார்க்கெட்டிற்கு 900 டன் வரத்து வந்து கொண்டிருந்த தக்காளி இப்போது பாதியாக குறைந்துள்ளது.
குறிப்பாக பெங்களூரு தக்காளி கிலோ ரூ.85, நாட்டு தக்காளி கிலோ ரூ.85 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் சில நாட்களில் ரூ.100 நெருங்கும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதற்கு அடுத்தபடியாக கடந்த வாரம் ரூ.50க்கு விற்பனை செய்யப்பட்ட அவரைக்காய் தற்போது ரூ. 90க்கு விற்பனை செய்யப்படுகிறது. முருங்கைக்காய் ரூ.20இல் இருந்து ரூ.60க்கும், பீன்ஸ் ரூ.60இல் இருந்து ரூ.80க்கும், கத்திரிக்காய் ரூ.20இல் இருந்து ரூ.30க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சதத்தை நெருங்கும் தக்காளி விலை விலையேற்றம் குறித்து கோயம்பேடு காய்கறி வியாபாரி பிரகாஷ் கூறுகையில், ”ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் மழைக்காலம் என்பதால் வரத்து குறைந்துள்ளது. இதுவே விலையேற்றத்திற்கான காரணம் ஆகும். திடீர் விலை ஏற்றத்தினால் வியாபாரம் குறைந்துள்ளது. ஒரு கிலோ, இரண்டு கிலோ வாங்கக்கூடிய பொதுமக்கள் தற்போது குறைவாக வாங்குகின்றனர்.
மக்களும் அத்திவாசியப் பொருட்களின் விலை உயர்வால் யோசித்து செயல்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். விலை அதிகரிப்பால் ஏற்பட்ட தேக்கத்தால் காய்கறிகள் கெட்டுப்போகிறது. அரசு இதில் எதுவும் செய்யமுடியாது. வானிலையைப் பொருத்து விளைச்சல் ஆகிறது.
தக்காளி விலை ரூ.150 நெருங்கும்போது அரசு நடவடிக்கை எடுக்கும் என நினைக்கிறேன். காய்கறிகளின் வரத்து அதிகமாக வரும்போது விலைவாசி குறைந்துவிடும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உச்சத்தை எட்டியது தங்கம் விலை!