சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி 'வெற்றி நடைபோடும் தமிழகம்' என்னும் தலைப்பில் முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, நாளை (ஜன. 02) ராமநாதபுரத்தில் பரப்புரையை மேற்கொள்கிறார்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவருவதையொட்டி அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தலை எதிர்கொள்ள அனைத்துக் கட்சிகளும் வியூகங்கள் அமைத்து தீவிரமாகச் செயல்பட்டுவருகின்றன. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஆகியோரும் தங்களது தேர்தல் பரப்புரைத் தொடங்கி மேற்கொண்டுவருகின்றனர்.
3ஆவது முறையாக ஆட்சி
இந்நிலையில், தமிழ்நாட்டில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து வரலாறு படைக்கும் முனைப்பில், 'வெற்றி நடைபோடும் தமிழகம்' என்ற முழக்கத்தோடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூறாவளித் தேர்தல் பரப்புரை மேற்கொண்டுவருகிறார். இதில் நாமக்கல், திருச்சி பரப்புரையை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத் தேர்தல் பரப்புரையின்போது டிசம்பர் 19ஆம் தேதி தனது சொந்த தொகுதியில் தேர்தல் பரப்புரையைத் தொடங்கிய முதலமைச்சர், தனது இரண்டாம் கட்ட தேர்தல் பரப்புரையை ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஜனவரி 4ஆம் தேதி வரை மேற்கொள்கிறார்.
திருச்சி மாவட்ட தேர்தல் பரப்புரையின்போது ராமநாதபுரத்தில் சூறாவளி பரப்புரை
ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை (ஜன. 02) காலை முதல் இரவு வரை பரப்புரையில் ஈடுபடுகிறார். காலை 9 மணிக்கு பார்த்திபனூரில் உள்ள தனியார் திருமண மஹாலில் அப்பகுதி முக்கியப் பிரமுகர்களைச் சந்திக்கிறார்.
அதன் பிறகு பரமக்குடி வரும் முதலமைச்சர் லேனா திருமண மஹாலில் அதிமுக பிரமுகர்களுடன் கலந்தாலோகிக்கிறார். அதனையடுத்து ஆயிரவைசிய மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பரமக்குடி நகரின் முக்கியப் பிரமுகர்களைச் சந்தித்துப் பேசுகிறார்.
அதன்பின்னர் பரமக்குடி பேருந்து நிலையம் அருகே திறந்த வேனில் இருந்தவாறு பரப்புரையில் ஈடுபடுகிறார். பரமக்குடியிலிருந்து பகல் 12 மணிக்கு சத்திரக்குடி வரும் முதலமைச்சர், அங்கு பொதுமக்கள் முன்னிலையில் பரப்புரையில் ஈடுபடுகிறார்.
முதலமைச்சர் ராமநாதபுரத்தில் சூறாவளி பரப்புரை
அங்கிருந்து ராமநாதபுரம் பட்டணம்காத்தான் பகுதியில் உள்ள நிஷா மஹாலுக்கு வரும் முதலமைச்சர் மகளிர் சுய உதவிக்குழுவினரைச் சந்தித்துப் பேசுகிறார். இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் டிபிளாக் பகுதியில் உள்ள ஏபிசி மஹால், அம்மா பூங்கா அருகேயுள்ள ஜி.எஸ். மஹாலில் முக்கியப் பிரமுகர்களைச் சந்தித்து அதிமுகவுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
அதன்பின் ராமநாதபுரம்-ராமேஸ்வரம் சாலையில் வாணி அருகே ஏஓன் மஹாலில் மாலை 3.30 மணிக்கு அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவினரைச் சந்தித்துப் பேசுகிறார்.
அங்கிருந்து கீழக்கரை சென்று, முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் மீனவர்கள், பொதுமக்களைச் சந்தித்துப் பேசுகிறார். மாலை 6 மணிக்கு மேல் கடலாடிக்குச் செல்லும் முதலமைச்சர் அங்குள்ள தேவர் மஹாலில் அதிமுக பொறுப்பாளர்களைச் சந்தித்துப் பேசுகிறார்.
அங்கிருந்து சாயல்குடி சென்று பொதுக்கூட்டத்தில் பேசும் எடப்பாடி பழனிசாமி, இரவு 7.15 மணிக்கு நரிப்பையூரில் ஜெபமாலை மாதா கல்யாண மஹாலில் முக்கியப் பிரமுகர்களைச் சந்தித்துப் பேசுகிறார். அதன்பின் நிறைவாக கன்னிராஜபுரத்தில் உள்ள தியாகி தர்மக்கன் கலை, அறிவியல் கல்லூரியில் பனை வெல்ல தொழிலாளர்களைச் சந்தித்துப் பேசுகிறார்.
முதலமைச்சர் வருகையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலர் எம்.ஏ. முனியசாமி தலைமையில் கட்சி நிர்வாகிகள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துவருகின்றனர். முதலமைச்சரின் வருகையை ஒட்டி மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.